தமிழகத்தில் தைப்பூசம் மற்றும் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தைப்பூசம் என்பது முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிக முக்கியமான திருவிழா. நாளை தை மாத பௌர்ணமி நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் காவடி எடுத்து, பால் குடம் தூக்கி, பல்வேறு வகையான விரதங்களுடன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறும்.
இந்த நாளில் ஆன்மிக சூழல் மிகுந்திருக்கும் என்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைத் தவிர்க்கவும், பக்தர்களின் அமைதியான கொண்டாட்டத்தை உறுதி செய்யவும் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அதேபோல், வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் நினைவு தினமும் இதே பிப்ரவரி 1 அன்று வருகிறது. வடலூர் வள்ளலார் பிறந்த நாள் அல்ல, அவரது அருள் பெருஞ்ஜோதி தரிசனம் பெற்ற நாள் ஆகும்.

அவர் சமூக சீர்திருத்தம், ஜீவகாருண்யம், அனைவருக்கும் உணவு என்ற கொள்கைகளை வலியுறுத்தியவர். அவரது நினைவு தினத்தில் அவரது போதனைகளை நினைவுகூரும் வகையில், மது போன்ற போதைப் பொருட்களின் விற்பனையைத் தடை செய்வது பொருத்தமானது என்று அரசு கருதுகிறது. தமிழகத்தில் தற்போது சுமார் 4,800-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன.
இதையும் படிங்க: தமிழகத்தில் மது விற்பனை சாதனை..!! குடியரசு தின விடுமுறைக்கு முன் ரூ.220 கோடி கடந்து சேல்ஸ்..!!
இவற்றுடன் இணைக்கப்பட்ட பார்கள், நட்சத்திர விடுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் என அனைத்தும் இந்த விடுமுறைக்கு உட்படும். சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையரின் அறிவுறுத்தலின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மீறி எந்தக் கடையும் இயங்கினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுப் பெண்கள் தாலி அறுக்க பாக்குறீங்களா ஸ்டாலின்? டாஸ்மாக் விவகாரத்தில் நயினார் தாக்கு..!