அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது சரியான முடிவு என்று முன்னாள் அமைச்சரும், திருவாரூர் மாவட்டச் செயலாளருமான ஆர். காமராஜ் தெரிவித்தார். "இயக்கத்துக்குள்ளேயே இருந்து கொண்டு தேவையில்லாதவற்றைப் பேசினால், இயக்கம் பெரும் பாதிப்பை சந்திக்கும்" என்று அவர் கடுமையாக விமர்சித்தார். திருவாரூர் மாவட்ட அதிமுக பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய பின்னர், செய்தியாளர்களிடம் அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.
செங்கோட்டையன் அதிமுகவில் குடும்ப அரசியல் நடப்பதாகக் குற்றம் சாட்டியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த காமராஜ், "இவ்வளவு நாட்கள் அவருக்கு இது தெரியவில்லையா? கடந்த 8.5 ஆண்டுகளாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியை வழிநடத்தி வருகிறார். கட்சியையும், தொண்டர்களையும், நிர்வாகிகளையும் காப்பாற்றியுள்ளார். அதனால்தான் தொண்டர்களும் நிர்வாகிகளும் அவரது பக்கம் நிற்கின்றனர். யாரும் அவரைப் பார்த்து பொறாமைப்படக் கூடாது. கடுமையாக உழைத்து இந்த நிலைக்கு வந்துள்ளார்" என்றார்.
மேலும், "தேர்தல் நேரத்தில் எல்லோரும் சேர்ந்து இயக்கத்தை கட்டுக்கோப்பாகக் கொண்டு செல்ல வேண்டும். அந்தக் கடமையிலிருந்து செங்கோட்டையன் தவறிவிட்டார். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி இப்படிப் பேசினால், பொதுச் செயலாளர் நடவடிக்கை எடுப்பது சரியே. அப்போதுதான் கட்சியை ஒழுங்காகக் கொண்டு செல்ல முடியும்" என்று வலியுறுத்தினார். செங்கோட்டையன் சீனியர் என்றாலும், இது பேசுவதற்கான நேரம் அல்ல என்றும் காமராஜ் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: 2017 முதல் இதுவரை.. நீக்கப்பட்ட முக்கிய தலைவர்கள்: ஆளும் போராட்டத்தின் பின்னணியில் தொடரும் நீக்கங்கள்..!!

திமுக அமைச்சர் கே.என். நேரு, "திமுக கூட்டணி உறுதியாக உள்ளது, அதிமுகவில் சிலர் பிரிந்து செல்கின்றனர்" என்று கூறியது குறித்தும் காமராஜ் பதிலளித்தார். "அதிமுக கூட்டணி பலமாக உள்ளது. போகப் போகத் தெரியும். மக்கள் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று தெளிவாக உள்ளனர். இந்தத் தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வருவார்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தவெக (தமிழக வெற்றிக் கழகம்) உடன் கூட்டணி வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, "பொதுச் செயலாளர் பழனிச்சாமி ஏற்கனவே தெளிவாக அறிவித்துவிட்டார். நாங்கள் தவெகவுடன் பேசவில்லை. அவர்களும் எங்களுடன் பேசவில்லை. அதிமுக - பாஜக கூட்டணி பலமாக உள்ளது" என்று கூறினார்.
அதிமுகவில் செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விலகியது கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பழனிச்சாமி தலைமையில் கட்சி ஒன்றுபட்டு செயல்படுவதாக நிர்வாகிகள் கூறுகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், கட்சி ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இந்தக் கூட்டங்கள் நடக்கின்றன. திருவாரூர் கூட்டத்தில் பாக முகவர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: நெரிஞ்சி முள்ளாய் குத்திய துரோகி!! இப்போதான் நிம்மதி! செங்கோட்டையன் குறித்து இபிஎஸ் விமர்சனம்!