தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 17-ஆவது சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலுக்கான பணிகளை அனைந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. மக்களின் தேவைகளை அறிந்து, தொலைநோக்கு பார்வையுடன் கூடிய தேர்தல் அறிக்கையைத் தயார் செய்ய மூத்த நிர்வாகிகள் அடங்கிய 10 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே உள்ள நிலையில், ஆளும் திமுக-விற்குப் போட்டியாக அதிமுக தனது தேர்தல் களப்பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கட்சியின் தேர்தல் அறிக்கையை வடிவமைக்க 10 பேர் கொண்ட குழுவை கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். இந்தக் குழுவில் அனுபவம் வாய்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கழகத்தின் மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் விபரம்:
நத்தம் இரா. விசுவநாதன், M.L.A. (கழக துணைப் பொதுச் செயலாளர்)
C. பொன்னையன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்)
முனைவர் பொள்ளாச்சி V. ஜெயராமன், M.L.A. (கழக தேர்தல் பிரிவுச் செயலாளர்)
D. ஜெயக்குமார் (கழக அமைப்புச் செயலாளர்)
C.Ve. சண்முகம், M.P. (கழக அமைப்புச் செயலாளர்)
செ. செம்மலை (கழக அமைப்புச் செயலாளர்)
பா. வளர்மதி (கழக மகளிர் அணிச் செயலாளர்)
O.S. மணியன், M.L.A. (கழக அமைப்புச் செயலாளர்)
R.B. உதயகுமார், M.L.A. (சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்)
முனைவர் எஸ்.எஸ். வைகைச்செல்வன் (கழக இலக்கிய அணிச் செயலாளர்)
இந்தக் குழுவினர் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, விவசாயிகள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் எனப் பல்வேறு தரப்பு மக்களின் கோரிக்கைகளை நேரடியாகக் கேட்டறிய உள்ளனர். மக்களின் உண்மையான தேவைகளைச் சட்டப்பூர்வமாகவும், பொருளாதார ரீதியாகவும் ஆராய்ந்து அவற்றை அறிக்கையில் சேர்ப்பதே இக்குழுவின் முதன்மைப் பணியாகும். இக்குழுவின் விரிவான பயணத் திட்டம் மற்றும் மாவட்ட வாரியான கருத்து கேட்பு கூட்டங்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் குருபூஜைக்கு இபிஎஸ்-க்கு அழைப்பு! நேரில் சென்று அழைத்த சுதீஷ்!
இதையும் படிங்க: "விஜய் ஒருத்தரால தான் முடியும்!" அதிமுக டூ தவெக.. மொத்தமா களமிறங்கும் புள்ளிகள்!