புதிய தமிழகத்தை உருவாக்குவதற்குத் தகுதியான தலைவராக விஜய் மக்களின் உள்ளங்களில் நிறைந்துள்ளதாகவும், மக்கள் சக்தியோடு அவர் ஆட்சிக்கட்டிலில் அமர்வதைத் தடுக்க முடியாது என்றும் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மக்கள் சந்திப்பு நிகழ்விற்குப் பிறகு கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன், அரசியலில் நிலவும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் குறித்து விரிவாகப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "1972-ல் எம்.ஜி.ஆர் அவர்கள் திமுகவிலிருந்து நீக்கப்பட்டபோது என்ன நிலை உருவானதோ, அதேபோன்ற ஒரு எழுச்சி தற்போது விஜயைப் பார்த்து உருவாகியுள்ளது. புதிய வரலாற்றைப் படைப்பதற்கு ஒரு தலைவர் தேவை என்ற மக்களின் எதிர்பார்ப்பைத் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முழுமையாகப் பூர்த்தி செய்துள்ளார்" எனத் தெரிவித்தார்.
வேலுநாச்சியார் மற்றும் குயிலி ஆகியோரின் வீர வரலாற்றைச் சுட்டிக்காட்டிய அவர், "ஆங்கிலேயர்களை விரட்டியடித்த வேலுநாச்சியாரின் தீரத்தையும், உயிரைத் தியாகம் செய்த குயிலியின் வீரத்தையும் தனது கொள்கையாகக் கொண்டு, எதிர்காலத் தமிழகத்தின் நம்பிக்கை நாயகனாக விஜய் உருவெடுத்துள்ளார். அவரது கொள்கை முழக்கங்கள் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதிமுகவில் உள்ள முக்கியப் புள்ளிகள் மிக விரைவில் தவெக-வில் சேர உள்ளனர். அதேபோல், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் பெரும்பாலும் தவெக-விற்குச் செல்ல வேண்டும் எனத் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்துள்ளனர். இது குறித்து ஓபிஎஸ் இறுதி முடிவை மேற்கொள்வார்" எனப் பரபரப்பைக் கிளப்பினார்.
இதையும் படிங்க: அதிமுக-பாஜக வெற்றிக்கு உழைப்போம்; "தவெக கட்சியே கிடையாது!" – விஜய்யை வெளுத்து வாங்கிய சரத்குமார்!
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்துப் பேசிய அவர், "வாக்காளர் பட்டியலில் சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இறந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்தவர்களின் பெயர்கள் இன்னும் பட்டியலில் உள்ளன. தவெக தலைவர் கட்டளையிட்டபடி, வரும் ஜனவரி 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் தவெக தொண்டர்கள் விடுபட்ட வாக்காளர்களைச் சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவார்கள். இளைஞர்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் தவெக-விற்கு வந்து சேருவதை உறுதி செய்வோம். கூட்டணி குறித்த முடிவைத் தலைமை எடுக்கும்; ஆனால் தேர்தல் நேரத்தில் யார் யாரெல்லாம் வருவார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" எனத் தனது பேட்டியில் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் நியமனம்.. வாழ்த்து தெரிவித்த விஜய்!