அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் கடந்த 7-ந் தேதி முதல் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன்படி கோவை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 33 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு திரட்டினார். மேலும் சுற்றுப்பயணத்தின் போது திமுக செய்ததை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் விழுப்புரத்தில் வரும் 17ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசு பதவியேற்ற நாளில் இருந்து, எனது தலைமையிலான அம்மா ஆட்சியில், மக்கள் நலன் கருதி கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்குவது; நீர்த்துப்போகச் செய்வது; தான் செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வது போன்ற செயல்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. இந்த அரசு ஒரு செயலற்ற அரசு என்பதை நாள்தோறும் நிரூபித்துக்கொண்டு இருகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதையும் படிங்க: லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை... மக்கள் விரோத ஆட்சி... திமுகவை பந்தாடிய இபிஎஸ்..!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் வெளியிட்ட, இந்தக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பில், திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசின் தூண்டுதலோடு, விழுப்புரம் நகரத்தில் இயங்கி வரும் அண்ணாமலை பல்கலைக்கழக விழுப்புரம் முதுநிலை விரிவாக்க மையத்தினை மூடும் நோக்கத்தில், இம்மையத்திற்கு மட்டும் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை என்றும் இதன்மூலம் திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.

எனவே விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவியர் கல்வி பயிலும் வகையில், அண்ணாமலை பல்கலைக்கழக விழுப்புரம் முதுநிலை விரிவாக்க மையத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை திமுக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் இதனை வலியுறுத்தி அதிமுக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், வரும் 17ம் தேதி காலை 9 மணியளவில், கழக அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகம், எம்.பி., தலைமையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு வரும் திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், அதிமுக நிர்வாகிகள், மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது திமுக.. விளாசிய எடப்பாடி பழனிசாமி..!