சென்னை, ஜனவரி 6: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரணையை தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே முடிக்க வேண்டும் என்று கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யமூர்த்தி தாக்கல் செய்துள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி பிளவு ஏற்பட்ட பிறகு, இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் ஒரு வழக்கை சூர்யமூர்த்தி தொடர்ந்தார். அதில், உட்கட்சி விவகாரங்கள் தீரும் வரை இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கக்கூடாது என்று கோரியிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சூர்யமூர்த்தியின் கோரிக்கையை தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் ஆராயுமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உள்ளடி வேலை கண்டிப்பா நடக்கும்?! தேஜ கூட்டணியில் இணைய ஓபிஎஸ், டிடிவி தயக்கம்!

இந்நிலையில், சூர்யமூர்த்தி மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், “தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் இதுவரை விசாரணையை முடிக்கவில்லை.
முறையான விசாரணை இல்லாமல் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டால், ஈடு செய்ய முடியாத பாதிப்பு ஏற்படும். எனவே, தேர்தல் அறிவிப்புக்கு முன்பே இவ்விவகாரத்தில் விசாரணையை முடித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமாக இரட்டை இலை இருக்குமா என்பது கட்சிக்கு மிக முக்கியமானது. இச்சின்ன விவகாரம் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது பல மாதங்களாகியும் இறுதி முடிவு எடுக்கப்படாதது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தீர்ப்பு அதிமுகவின் தேர்தல் உத்திக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: எல்லாம் புகழும் முருகனுக்கே!! திருப்பரங்குன்றம் தீப வழக்கு!! ராம ரவிக்குமார் மகிழ்ச்சி!