மதுரை, ஜனவரி 6: திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது. இத்தீர்ப்பை வரவேற்ற மனுதாரர் ராம ரவிக்குமார், “எல்லாம் புகழும் முருகனுக்கே” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பழமையான தீபத்தூணில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரி, ராம ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்தாண்டு உத்தரவிட்டார்.
இத்தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு, கோயில் நிர்வாகம் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். இம்மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
இதையும் படிங்க: அடங்காத அதிகார திமிர்… திருந்தாத இந்து விரோத திமுக… விஷத்தை உமிழுவதாக நயினார் காட்டம்…!
இனி ஒவ்வொரு கார்த்திகை திருநாளிலும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். தீபம் ஏற்றுவது ஹிந்து மரபு என்றும், சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற அரசின் கருத்தை நீதிமன்றம் நிராகரித்தது. மலை உச்சியில் உள்ள தீபத்தூண் கோயிலுக்கே சொந்தமானது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.
இத்தீர்ப்புக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய மனுதாரர் ராம ரவிக்குமார், வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்கள், செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். “இந்த வெற்றி முருகன் அருளால் கிடைத்தது. இது தொடரும்” என்றார்.

உள்ளூர் மக்கள் தன்னை வெளியூர்காரர் என்று கூறியதை நிராகரித்த அவர், “நான் மதுரைக்காரன் தான். வழக்கு தொடுத்தவர் மீதும், நீதிபதி மீதும் அவதூறு பரப்பியவர்கள் மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
இவ்வெற்றியை, போராடிய உள்ளூர் மக்கள், இதற்காக உயிர்த்தியாகம் செய்த ராஜகோபால், காளிதாசன், பரமசிவன், பூரணசந்திரன் ஆகியோருக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார். “எல்லாவற்றையும் முருகன் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவமானங்களை உடைத்து முருகன் வெகுமதி அளித்துள்ளார். எல்லாம் புகழும் முருகனுக்கே” என்று மீண்டும் மீண்டும் கூறினார்.
மேலும், தமிழக அரசு அனைத்து மக்களுக்கும் சாதகமாக இருக்க வேண்டும் என்றும், ஹிந்துக்களுக்கு விரோதமாக இருந்தது என்றும் விமர்சித்தார். தர்காவுக்கு 15 மீட்டர் தள்ளி தீபம் ஏற்றலாம் என்ற நீதிமன்ற உத்தரவு இருந்த போதிலும், சமூக நல்லிணக்கம் கெட்டுவிடும் என்று கூறியது தவறு என்றார். ஹிந்துக்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் குறிப்பிட்டார்.
இத்தீர்ப்பு முருகன் பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் கார்த்திகை திருநாளில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: இனியாச்சு அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்துங்க... தீபத்தூண் தீர்ப்பை சுட்டிக்காட்டிய அண்ணாமலை...!