கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்ட 28 வார்டுகளில் படுதோல்வி அடைந்துள்ளது. இடுக்கி, பாலக்காடு, திருவனந்தபுரம் மாவட்டங்களில் உள்ள பல ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால், பெரும்பாலான இடங்களில் இரண்டு இலக்க ஓட்டுகளே கிடைத்தன.
இடுக்கி மாவட்டத்தில் மறையூர், மூணாறு, தேவிகுளம், வட்டவடை, சின்னக்கானல், குமுளி, பீர்மேடு போன்ற ஊராட்சிகளிலும், தேவிகுளம் ஊராட்சி ஒன்றியம், இடுக்கி மாவட்ட ஊராட்சி ஆகியவற்றிலும் அ.தி.மு.க. போட்டியிட்டது.
இத்தேர்தலுக்கு தமிழகத்தில் இருந்து நிர்வாகி பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ.க்கள் ஆனந்தன், மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: வந்தே மாதரம் 150... பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டி.... மக்கள் மாளிகை அறிவிப்பின் முழு விவரம்...!
ஆனால், இவர்கள் சரிவர தேர்தல் பணி செய்யவில்லை என்று அ.தி.மு.க. வேட்பாளர்கள் புகார் கூறுகின்றனர். மூணாறு, தேவிகுளம் போன்ற இடங்களில் பொறுப்பாளர்கள் சில வாக்காளர்களிடம் 'நோட்டீஸ்' கொடுத்து, அதை அலைபேசியில் படம் பிடித்து 'போட்டோ ஷூட்' நடத்தியதுடன் நிறுத்திக்கொண்டனர்.
சுற்றுலா வந்தது போல் செயல்பட்டதாகவும் வேட்பாளர்கள் புலம்புகின்றனர். இதனால் ஓட்டுகள் கிடைக்கவில்லை என்று கட்சியினர் கோபத்துடன் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் முடிவுகளில் சில உதாரணங்கள்: மூணாறு ஊராட்சியில் 13-ம் வார்டு வேட்பாளர் பவுன்ராஜ் 62 ஓட்டுகள், 18-ம் வார்டு முருகன் 2 ஓட்டுகள் பெற்றனர். தேவிகுளம் ஊராட்சியில் 14-ம் வார்டு முருகையா 16 ஓட்டுகள், 15-ம் வார்டு கிட்னம்மா 18 ஓட்டுகள் பெற்றனர். தேவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மறையூர் வார்டு சாந்தகுமார் 145 ஓட்டுகள், காந்தலூர் வார்டு சுரேஷ் 51 ஓட்டுகள் பெற்றனர்.
2015 உள்ளாட்சித் தேர்தலில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் தேர்தல் பணி நடந்தது. தமிழக பாணியில் வாக்காளர்களை கவனித்ததால் சில வார்டுகளில் வெற்றி கிடைத்தது. ஆனால், இம்முறை அது நடக்கவில்லை என்று கட்சியினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தமிழக பொறுப்பாளர்கள் மீது கடும் அதிருப்தி நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: நாடு முழுவதும் முட்டைகளின் மாதிரிகள் ஆய்வு..!! FSSAI அதிரடி உத்தரவு..!!