அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் சந்தித்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
பாஜக தரப்பில் அமித் ஷா கூறியதாவது: தமிழகத்தில் வரும் தேர்தலில் பாஜக 60 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் பாஜக வலுவாக உள்ளதால் அங்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும். கோவை தெற்கு, சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், பொள்ளாச்சி உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக கட்டாயம் போட்டியிட விரும்புகிறது.
கன்னியாகுமரியில் 3, திருநெல்வேலியில் 2 தொகுதிகள் தர வேண்டும். கொங்கு பகுதியில் கவுண்டர் சமூகத்தினர் அதிகம் உள்ளதால், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை அங்கு போட்டியிட வைக்கலாம். அவரது செல்வாக்கை தேர்தல் பிரசாரத்தில் முழுமையாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இதையும் படிங்க: டெல்லி புறப்பட்டார் எடப்பாடி! யாருக்கு எத்தனை தொகுதி? அமித்ஷாவுடன் அடுத்த மீட்டிங்!!
மேலும், பாமகவின் ஒரு பிரிவான அன்புமணி ராமதாஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இணைந்தது வரவேற்கத்தக்கது. ஆனால் வன்னியர் சமூக வாக்குகள் முழுமையாகக் கிடைக்க பாமக நிறுவனர் ராமதாஸ்யையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும். தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூக வாக்குகள் முழுமையாகக் கிடைக்க அமமுக (டிடிவி தினகரன் கட்சி) கூட்டணியில் இருக்க வேண்டும். அமமுகவை இணைக்க அதிமுக எந்த முயற்சியும் எடுக்க வேண்டியதில்லை; அண்ணாமலை வாயிலாக பாஜகவே அதைச் செய்து முடிக்கும்.

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். அமைச்சரவையில் பாஜகவும் இடம்பெறும். அதற்காக 3 அமைச்சர் பதவிகள் ஒதுக்க வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதைக் கேட்ட எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிகிறது. 60 தொகுதிகள் மட்டுமல்லாமல் கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகள் கேட்கப்பட்டதால் அவர் உடனடியாக எந்த பதிலும் கூறவில்லை. அமித் ஷா, "உங்கள் தரப்பில் ஏதாவது கோரிக்கை இருந்தால் கூறுங்கள்" என்று கேட்டதும், பழனிசாமி தன் தரப்பு கோரிக்கைகளை முன்வைத்தார்.
பழனிசாமி தரப்பில் கூறப்பட்டவை: திமுக ஆட்சியில் உள்ளது மட்டுமல்லாமல் வலுவான இயக்கமாகவும், உடையாத கூட்டணியாகவும் உள்ளது. பண பலத்துடன் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. பல ஊழல் புகார்களில் சிக்கிய அமைச்சர்களும் பண மூட்டைகளுடன் களமிறங்க உள்ளனர். மத்திய விசாரணை அமைப்புகள் (அமலாக்கத்துறை போன்றவை) மூலம் அவர்களை முடக்காவிட்டால் திமுக சுதந்திரமாகத் தேர்தலை எதிர்கொண்டு நம்மை வீழ்த்த முயலும்.
அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பெரியசாமி உள்ளிட்டோர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளன. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார். கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 30 தொகுதிகளை அவருக்கு ஒதுக்கி வெற்றி பெறச் செய்ய திமுக திட்டமிட்டுள்ளது. செந்தில் பாலாஜியை இவ்வாறு செயல்பட விட்டால் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படும். எனவே மத்திய விசாரணை அமைப்புகளை திமுகவுக்கு எதிராக தீவிரப்படுத்த வேண்டும்.
கூட்டணி ஆட்சி குறித்து தேர்தலுக்கு முன் அறிவித்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள். தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யலாம் என்றும் பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இச்சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமியுடன் இந்தி தெரிந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மட்டுமே உடனிருந்தார். இந்தச் சந்திப்பு தமிழகத்தில் என்டிஏ கூட்டணியின் வியூகத்தை பெரிதும் பாதிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: உஷ்ஷ்ஷ்!! கப்சிப்னு இருக்கணும்! காங்., வாய் பேசினால் அவ்ளோதான்! ஸ்டாலின் ரகசிய உத்தரவு!