தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) இன்று (ஜனவரி 7) டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்தபோது, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அவரைச் சந்தித்துப் பேசினார். அப்போது இபிஎஸும் அமித் ஷாவைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை.
இந்நிலையில், இன்று காலை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இபிஎஸ் இல்லத்துக்குச் சென்று சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இடம்பெறுவது உறுதியானது. பாமகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து முடிவு எட்டப்பட்டுவிட்டதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பாமகவுக்கு 17 தொகுதி?! ஒரு எம்.பி சீட்?! படிந்தது பேரம்! வெளியானது முக்கிய அப்டேட்!!

பாமகவுடனான கூட்டணியை உறுதிப்படுத்திய உடனேயே இபிஎஸ் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி டெல்லியில் முகாமிட்டுள்ளார். இபிஎஸ் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சந்திப்பில் அதிமுக-பாஜக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படும் நிலையில், இந்தச் சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வலுப்பெறும் விதமாக இந்த நகர்வுகள் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கொஞ்சம் விட்டுக்கொடுங்க பழனிசாமி!! அமித்ஷா கொடுத்த அசைன்மெண்ட்! பீகார் அலைக்கு அஸ்திவாரம்!