புதுடெல்லி: இந்தியாவில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதற்காக மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், 2029 டிசம்பர் 31-ம் தேதிக்குள் நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தை வேரறுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காலக்கெடு நிர்ணயித்துள்ளார்.
புதுடெல்லியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் போதைப்பொருள் தடுப்புப் படை தலைவர்கள் பங்கேற்ற 3-வது தேசிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை அமித் ஷா தொடங்கி வைத்து பேசினார். 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த போதைப்பொருள் தடுப்புப் படை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அமித் ஷா, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் இனி மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்தியாவுக்குள் ஒரு கிராம் போதைப்பொருள் கூட நுழையவோ, இந்தியாவில் இருந்து வெளியே செல்லவோ அனுமதிக்கக் கூடாது என்பதே இலக்கு என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: அமித் ஷா தலைமையில் நாளை தொடங்கும் முக்கிய மாநாடு! டெல்லியில் குவியும் 850 பாதுகாப்பு அதிகாரிகள்!
கடந்த 5 ஆண்டுகளாக போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமித் ஷா தெரிவித்தார். போதைப்பொருள் பிரச்சினை நாட்டுக்கும் உலகத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்தப் போராட்டம் கடினமானதாக இருந்தாலும் அதை கைவிட முடியாது என்றும் அவர் கூறினார்.

இதற்காக உளவுத்தகவல் சேகரிப்பு, விசாரணை, நிதி தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் வழக்குத் தொடருதல் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மாநில அளவில் மாவட்டங்களை மையமாகக் கொண்டு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் தடுப்புக்கான 2026–2029 தொலைநோக்கு ஆவணத்தில் குறிப்பிட்ட இலக்குகள் மற்றும் காலக்கெடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சகம் அல்லது போதைப்பொருள் தடுப்பு அமைப்புகள் மட்டுமே தனியாக இந்தப் பணியை மேற்கொள்ள முடியாது என்றும், மாநிலங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, போதைப்பொருள் கடத்தல் தொடர்பான நெட்வொர்க்குகளை கண்டறிதல், செயற்கை போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத ஆய்வகங்கள் மீது நடவடிக்கை, டார்க்நெட் மற்றும் கிரிப்டோ தொடர்பான விசாரணைகள் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
இதனால், 2029 டிசம்பர் 31க்குள் இந்தியாவில் போதைப்பொருள் வர்த்தகத்தை வேரறுக்கும் இலக்கை மத்திய அரசு முன்வைத்துள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகள் அடுத்த 3 ஆண்டுகளில் எந்த அளவுக்கு தீவிரமடையும் என்பது கவனத்தை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஒன்றிணைவோம்! போதைப்பொருளை ஒழிப்போம்! மன் கி பாத் நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு மோடி வேண்டுகோள்!