திருச்சி, ஜனவரி 6: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு இரு நாள் பயணமாக வந்துள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான எஸ்.பி. வேலுமணி அவரை திருச்சியில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்று அமித் ஷா திட்டவட்டமாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமித் ஷா ஜனவரி 4 மற்றும் 5ஆம் தேதிகளில் தமிழகத்தில் பாஜக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். புதுக்கோட்டையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் மாநிலம் தழுவிய பயணத்தின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட அவர், திருச்சியில் தங்கியிருந்தார். இந்நிலையில், எஸ்.பி. வேலுமணி ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரு நாள்களிலும் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இச்சந்திப்புகள் மூடிய அறையில் நடந்ததாகவும், தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
பாஜக வட்டாரங்களில் இருந்து கசிந்த தகவலின்படி, திமுகவை தோற்கடிக்காவிட்டால் பாஜகவை விட அதிமுகவுக்கே அதிக பாதிப்பு ஏற்படும் என்று அமித் ஷா கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இல்லாத அனைத்து கட்சிகளையும் என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவுக்கு எத்தனை தொகுதி? அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ் தீவிர ஆலோசனை!! சூடுபிடிக்கும் தேர்தல்களம்!
குறிப்பாக, 2021 சட்டமன்றத் தேர்தலில் அமமுக மற்றும் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க வலியுறுத்திய போது எடப்பாடி பழனிசாமி மறுத்ததை சுட்டிக்காட்டி, அவை சேர்ந்திருந்தால் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்திருக்காது என்று அமித் ஷா கூறியதாக தெரிகிறது.

வரும் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், தேமுதிக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பீகார் தேர்தல் உதாரணத்தை எடுத்துக்காட்டி, அங்கு நிதிஷ் குமார் ஆரம்பத்தில் சிராக் பஸ்வான், ஜிதன்ராம் மஞ்சி ஆகியோரை கூட்டணியில் சேர்க்க மறுத்த போதிலும், பாஜக வற்புறுத்தலால் சேர்த்ததால் வெற்றி கிடைத்ததை குறிப்பிட்டுள்ளார். அதைப் போல எடப்பாடி பழனிசாமியும் பிடிவாதத்தை தளர்த்த வேண்டும் என்று அமித் ஷா கூறியதாக தெரிகிறது.
வலுவான கூட்டணி இல்லாவிட்டால் அதிமுக நிர்வாகிகள் நம்பிக்கை இழந்து வேறு கட்சிகளுக்கு சென்றுவிடுவர் என்றும் அமித் ஷா எச்சரித்துள்ளார். இச்சந்திப்பு அதிமுக - பாஜக கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த சந்திப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2026 தேர்தலை முன்னிட்டு என்டிஏ கூட்டணியை விரிவுபடுத்த பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: திமுகவை எதிர்க்க பாஜக முக்கியம்! அதிமுகவிடம் கறார்! முக்கிய தொகுதிகளை கேட்டுப்பெற திட்டம்!