தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இரண்டு நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். இது மாவட்ட மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து காலையில் புறப்பட்ட அவர், தூத்துக்குடி விமான நிலையம் வழியாக வந்து, அங்கு அமைச்சர் பி. கீதா ஜீவன் உள்ளிட்டோர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சாலை மார்க்கமாக கன்னியாகுமரி நோக்கி பயணித்தார்.
இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரை சாலையில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் வெள்ளி விழா நினைவு அலங்கார வளைவை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 2000-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியால் குமரி முனையில் கடலுக்கு நடுவே திறக்கப்பட்ட 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை, 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவின் ஒரு பகுதியாகவே இந்த நினைவு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கன்னியாகுமரிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, கடற்கரை சாலையில் கட்டப்பட்டுள்ள இந்த வெள்ளி விழா நினைவு வளைவை திறந்து வைத்தார். இந்த வளைவு சுமார் 1.45 கோடி ரூபாய் செலவில் கன்னியாகுமரி பேரூராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ளது. இது திருவள்ளுவர் சிலையின் 25 ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட அலங்கார வளைவு ஆகும்.
இதையும் படிங்க: கட்டாய காத்திருப்பு பட்டியலில் பேராசிரியர்கள்... பெரும் அநீதி..!! ராமதாஸ் ஆவேசம்..!!
மின்னொளி அலங்காரங்களுடன் கடற்கரையோரம் அழகாக எழுந்து நிற்கும் இந்த வளைவு, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலையை மேலும் பிரபலப்படுத்தவும், பாரம்பரியத்தை போற்றவும் உதவும் ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... புயல் வேகத்தில் தொகுதி பங்கீடு...! வரும் 27 ஆம் தேதி DMK - CPI பேச்சுவார்த்தை..!!