ஆந்திரப் பிரதேசத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு, நிர்வாகத்தை முற்றிலும் கார்ப்பரேட் பாணியில் நடத்தி வருகிறது. தனியார் நிறுவனங்களைப் போல அரசு துறைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், மேம்படுத்தவும் தனியார் நிபுணர்களையும் ஆலோசகர்களையும் பெருமளவில் பணியமர்த்தியுள்ளார்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகளின் திறமை மற்றும் பணிகளை மதிப்பீடு செய்வது இவர்களது முக்கியப் பணியாக உள்ளது. அரசு அமல்படுத்தும் திட்டங்கள் மக்களைச் சென்றடைகிறதா, சட்டம்-ஒழுங்கு நிலைமை, பொது அமைதி, கொள்கை அமலாக்கம் உள்ளிட்டவற்றை உன்னிப்பாக கவனிக்க கள கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தினசரி கள நிலவரங்களை ஆராய்ந்து உடனடியாக முதல்வருக்கும் அவரது மகனும் அமைச்சருமான நாரா லோகேஷுக்கும் தகவல் அனுப்புகின்றனர். இதனால் அரசு நிர்வாகத்தில் உள்ள பலவீனங்களை விரைவாகக் கண்டறிந்து சரிசெய்ய முடிகிறது. மக்கள் சேவையில் ஏதேனும் தடை ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ராகுல்காந்தி - பிரியங்கா இடையே சண்டை!! பற்ற வைக்கும் பாஜக! புது குண்டை போடும் மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு!
சந்திரபாபு நாயுடுவுக்கு இந்த நிபுணர்கள் வழிகாட்டுவது மட்டுமல்லாமல், பொதுக்கூட்டங்களில் அவர் எப்படி பேச வேண்டும், மேடை அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்கின்றனர். சமீபத்திய கருத்துக்கணிப்பில் அமைச்சர்களின் செயல்பாடு மதிப்பீடு செய்யப்பட்டது.

அதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகமது பரூக் முதலிடமும், சுற்றுலாத் துறை அமைச்சர் துர்கேஷ் இரண்டாமிடமும் பிடித்தனர். முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆறாவது இடமும், துணை முதல்வர் பவன் கல்யாண் பத்தாவது இடமும், நாரா லோகேஷ் எட்டாவது இடமும் பிடித்தனர்.
மக்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே சிறந்த தலைமையின் அடையாளம் என்று சந்திரபாபு நாயுடு நம்புகிறார். அதை நிறைவேற்ற கார்ப்பரேட் பாணி கண்காணிப்பை அறிமுகப்படுத்தியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பே மாணவர்கள் மூலம் கருத்துக்கணிப்பு நடத்திய அனுபவம் கொண்ட சந்திரபாபு, இப்போது அதை டிஜிட்டல் மற்றும் கார்ப்பரேட் மயமாக்கியுள்ளார்.
இந்த புதிய அணுகுமுறை ஆந்திர அரசு நிர்வாகத்தை பம்பரமாக சுழல வைத்துள்ளது. அமைச்சர்களும் அதிகாரிகளும் ஒருவித பயத்துடன் திறம்பட பணியாற்றி வருகின்றனர்.
இதையும் படிங்க: தம்பி… நீ கீழ இறங்குனா தான் முத்தம் கொடுப்பேன்… ஈரோட்டில் மாஸ் காட்டும் விஜய்….!