தமிழகத்தில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும் விரும்பும் நிறுவனங்களை ஆந்திராவுக்கு அழைத்துச் செல்ல அம்மாநில அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சென்னை மற்றும் கோவையில் முதலீட்டாளர்கள் சந்திப்பு கூட்டங்களை ஆந்திர அரசு நடத்த உள்ளது. இதில் தமிழக தொழில்துறையினர் பங்கேற்க வேண்டாம் என, தமிழக அரசு தரப்பில் ரகசியமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் நிறுவனங்களை தங்கள் மாநிலத்திற்கு ஈர்க்கும் வகையில், ஆந்திர அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக குறைந்த விலையில் தொழில் நிலம், மின்சார வரி தொடர்பான சலுகைகள், பத்திரப்பதிவு கட்டண விலக்கு, மூலதன மானியம் உள்ளிட்ட பல்வேறு ஊக்கத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சலுகைகள் குறித்து தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களிடம் நேரடியாக எடுத்துரைத்து, புதிய முதலீடுகளை ஆந்திராவுக்கு கொண்டு செல்லும் நோக்கில் முதலீட்டாளர் சந்திப்பு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் வரும் 11-ம் தேதியும், கோவையில் 12-ம் தேதியும் இந்த கூட்டங்கள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: குட் நியூஸ்! தமிழக ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு ஜப்பானில் வேலை! நிசான் நிறுவனத்துடன் தவெக அரசு ஒப்பந்தம்!

இதில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ஆந்திர அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, தமிழக அரசு அதிகாரிகள் சில தொழில்துறையினரை தொடர்பு கொண்டு, ஆந்திராவின் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தி வருவதாக தொழில்துறையினர் கூறுகின்றனர்.
தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களை ஆந்திரா ஈர்க்க முடியாத வகையில், தமிழகமும் போட்டி மாநிலங்களுக்கு இணையான சலுகைகளை வழங்க வேண்டும் என்பதே தொழில்துறையினரின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
“ஆந்திர அரசு வழங்கும் சலுகைகளுக்கு இணையான சலுகைகளை தமிழகமும் வழங்கினால், தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களை வேறு மாநிலங்களுக்கு மாற்றுவது எளிதாக இருக்காது. முதலீடுகளை தக்கவைக்க போட்டித்திறன் கொண்ட தொழில் கொள்கைகள் அவசியம்” என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்துக்கும் ஆந்திராவுக்கும் இடையே முதலீடுகளை ஈர்ப்பதில் போட்டி அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொழில் வட்டாரத்தில் தற்போது கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 2026 வேளாண் பட்ஜெட் நிறைவு! 130 நிமிடங்கள் உரையை வாசித்தார் அமைச்சர் வினோத்! சட்டசபை ஒத்திவைப்பு!