தமிழக அரசியலில் புதிய அலை உருவாக்கும் நோக்கில், பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, ‘வி த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி மக்கள் சேவை அடிப்படையிலான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.
போதையில்லா தமிழகம் என்ற இலக்கை முன்னிறுத்தி மது மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரங்களை மாநிலம் முழுவதும் நடத்தி வரும் இவ்வியக்கம், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் தூர்வாருதல் மற்றும் கடற்கரை தூய்மைப்படுத்தல் போன்ற சுற்றுச்சூழல் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கன்னியாகுமரி கடற்கரை மற்றும் மதுரை வைகை ஆற்றுத் தூய்மைப் பணிகளில் அண்ணாமலையே நேரடியாகப் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாதத்தை மகளிர் மாதமாகவும், நவம்பர் மாதத்தை இளைஞர் மாதமாகவும் அறிவித்து பல்வேறு சமூகப் பணிகளைத் திட்டமிட்டுள்ள இவ்வியக்கத்தில் ஏற்கனவே சுமார் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டம் எதிரொலி! தமிழக அரசுக்கு அண்ணாமலை வைத்த முக்கிய கோரிக்கை!

உறுப்பினர் சேர்க்கை தற்போது இணையதளம் வழியாக பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் ஓ.டி.பி. மூலம் மட்டுமே நடைபெறுகிறது. இதனால் சாதாரண மக்களுக்கு சிரமம் ஏற்படுவதால், ‘மிஸ்டு கால்’ மூலம் எளிதாகச் சேரக்கூடிய வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூகப் பணிகள் மூலம் மக்கள் மத்தியில் வேரூன்றிய பிறகு, அரசியல் கட்சியாக உருமாறும் பணிகளை அண்ணாமலை தொடங்கிவிட்டார். அமைப்பின் பொதுச் செயலாளராக கரு. நாகராஜனை நியமித்துள்ள அவர், பிற பதவிகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதிலும் ஈடுபட்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்த பிறகு 2027ஆம் ஆண்டில் புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் திட்டம் உள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2029 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் பலத்தை நிரூபிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மக்கள் சேவையை முன்னிறுத்தி அரசியல் மாற்றத்தை நோக்கி நகரும் இந்த முயற்சி, தமிழக அரசியலில் புதிய பரிமாணத்தை உருவாக்குமா என்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: “ஒரு தலைமுறையை ஸாம்பிகளாக உருவாக்குகிறோம்...” - பகீர் கிளப்பிய அண்ணாமலை... மத்திய அரசுக்கு நேரடி கேள்வி...!