உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக பரபரப்பான அரசியல் சூழல் உருவாகியுள்ளது. கட்சியின் அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்ட ஆகாஷ் ஆனந்தின் அதிகாரம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கட்சி தலைவர் மாயாவதி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. இந்த சூழலில், பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்களை ஆகாஷ் ஆனந்த்தான் தேர்வு செய்வார் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரவியது. இதன் காரணமாக பல்வேறு நிர்வாகிகள் மற்றும் விருப்பமனுதாரர்கள் மாயாவதியை சந்திப்பதை விட ஆகாஷ் ஆனந்தை சந்திக்க தொடங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலைமையைத் தொடர்ந்து, கட்சியில் அதிகாரம் குறித்த குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காக மாயாவதி நேரடியாக விளக்கம் அளித்துள்ளார். உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதியாக தேர்வு செய்யும் அதிகாரம் தன்னிடமே இருப்பதாகவும், ஆகாஷ் ஆனந்த் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை மட்டுமே வகிப்பார் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகள் இன்றும் அமளி! முடங்கியது பாராளுமன்றம்! ஆகஸ்ட் -3ம் தேதி வரை இரு அவைகளும் ஒத்திவைப்பு!

மேலும், பொதுக்கூட்டங்களை ஒருங்கிணைப்பது, தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மற்றும் கட்சியின் அமைப்பு பணிகளை கவனிப்பது மட்டுமே ஆகாஷ் ஆனந்தின் பொறுப்பு என்றும் மாயாவதி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கட்சிக்குள் அதிகார மையம் குறித்து பரவி வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் மாயாவதி செயல்பட்டு வருகிறார். இதற்காக வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவித்து தேர்தல் பணிகளை வேகப்படுத்தும் திட்டமும் கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், மாயாவதி தனித்து போட்டியிட்டால் பாஜகவுக்கு அரசியல் பலன் கிடைக்கலாம் என்ற மதிப்பீட்டின் அடிப்படையில், அவரை எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைக்க காங்கிரஸ் தரப்பில் முயற்சிகள் நடைபெறுவதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: 9வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்! விவாதத்தை தவிர்க்க எதிர்க்கட்சிகள் முயற்சி?! ஜே.பி.நட்டா கடும் தாக்கு!