தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கடும் பரபரப்பு நிலவியது. கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, நேற்றைய விவாதங்களின் தொடர்ச்சியாக எழுந்த சர்ச்சை காரணமாக திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் முதலமைச்சர் விஜய் திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அமலாக்கத்துறை ஆவணங்கள், சர்க்காரியா கமிஷன் அறிக்கை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி முந்தைய ஆட்சியின் ஊழல், முறைகேடுகள் குறித்து கடுமையாகப் பேசினார்.
இது தொடர்பான சில குறிப்புகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என திமுக தரப்பு இன்று கோரிக்கை விடுத்தது.காலை ஒன்பது முப்பது மணிக்கு தொடங்கிய அவை அமர்வில், திமுக கொறடா எ.வ. வேலு முதலமைச்சரின் நேற்றைய பேச்சு பேரவை விதிகளை மீறியதாகக் குற்றம்சாட்டினார். விசாரணையில் உள்ள விவகாரங்களையும், அவையில் இல்லாதவர்களைப் பற்றியும் பேசியதை நீக்க வேண்டும் என்றும், அமலாக்கத்துறை ஆவணங்களை ஆதாரமாகக் காட்டலாமா, சர்க்காரியா கமிஷனில் தீர்ப்பு வரா த நிலையில் குற்றம் சுமத்துவது சரியா என்றும் கேள்வி எழுப்பினார்.

முரசொலி மாறன் போன்றோர் குறித்த குறிப்புகளையும் நீக்கக் கோரினார்.சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் இதற்கு உடனடி பதிலளித்தார். ஏற்கனவே விவாதிக்கப்பட்ட விஷயங்களை நீக்க வேண்டிய அவசியமில்லை என்றும், முதலமைச்சரின் பேச்சில் எதையும் அவைக்குறிப்பிலிருந்து நீக்க முடியாது என்றும் தெளிவாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்குப் பிறகு திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷமிடத் தொடங்கினர். பேச அனுமதி கோரியும், நீக்கக் கோரியும் அவர்கள் சபாநாயகர் இருக்கை அருகே கூடினர்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடக்கம்... கடைசி நாள்... சூடுபிடிக்கும் மானியக் கோரிக்கை விவாதம்..!!
இருக்கையை முற்றுகையிட்டு தொடர்ந்து முழக்கமிட்டனர். அவை முழுவதும் அமளி சூழ்ந்தது.சபாநாயகர் மீண்டும் மீண்டும் அமைதியாக இருக்கும்படி எச்சரித்தார். ஆனால் உறுப்பினர்கள் அமளியை நிறுத்தவில்லை. அவையின் ஒழுங்கைக் காக்கும் பொறுப்பில் உள்ள அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். உடனடியாக அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
இதையும் படிங்க: அடுத்த கூட்டத்தொடரில் என் பேச்சை பாருங்க... அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி.!!