மகாராஷ்டிர மாநிலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளைக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பாஜகவைச் சேர்ந்த பராக் ஷா, ஒரு நாள் முழுவதும் பிச்சைக்காரர் வேடத்தில் மும்பை வீதிகளில் சுற்றிய சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
மும்பை காட்கோபர் கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ள பராக் ஷா, கடந்த 2024 மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலின்போது தனது வேட்புமனுவில் ரூ.3,383 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பை குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் மாநிலத்தின் மிகப்பணக்கார வேட்பாளர்களில் ஒருவராக அவர் அறியப்பட்டார்.
குஜராத்தி ஜைன சமூகத்தைச் சேர்ந்த பராக் ஷா, ஜைன மதத்தின் புனித மாதத்தை முன்னிட்டு தனது ஆன்மீக குருவான நம்ரமுனியின் வழிகாட்டுதலின்படி இந்த அனுபவத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 14-ம் தேதி தனது பாதுகாவலர்கள் மற்றும் உதவியாளர்களை உடன் அழைத்துச் செல்லாமல், தன்னை யாரும் அடையாளம் காண முடியாத வகையில் மேக்கப் போட்டு பிச்சைக்காரர் தோற்றத்தில் மும்பை தெருக்களில் வலம் வந்துள்ளார்.
இதையும் படிங்க: "விநாயகர் சிலையை அவமதித்த தவெகவினர்"..! அரெஸ்ட் பண்ணுங்க... நயினார் காட்டம்..!!

பின்னர் தனது அனுபவத்தை பகிர்ந்த பராக் ஷா, ஒருவருக்கு கிடைக்கும் மரியாதை பெரும்பாலும் அவருடைய பதவி மற்றும் அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை இந்த அனுபவம் உணர்த்தியதாக தெரிவித்தார். பிச்சைக்காரர் வேடத்தில் இருந்தபோது, வழக்கமாக தன்னை சந்திக்க வரிசையில் நிற்கும் சிலரைவிட தன்னைச் சுற்றியிருந்தவர்கள் உயர்ந்தவர்களாக உணர்ந்ததாகவும், இது வாழ்க்கையின் கசப்பான உண்மை என்றும் அவர் கூறினார்.
மும்பை மக்களின் மனிதநேயத்தையும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். ஒருவர் ரூ.20 கொடுத்து சாப்பிடச் செல்லுமாறு கூறியதாகவும், பணம் இல்லை என்று கூறிய ஏழை சமோசா வியாபாரி, எந்த தயக்கமும் இல்லாமல் இலவசமாக சமோசா கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பிச்சை எடுத்து உணவு சாப்பிட்ட பிறகு மேக்கப்பை அகற்றிய பராக் ஷா, தான் சென்ற அதே இடங்களுக்கு மீண்டும் சென்று அங்கிருந்த மக்களிடம் பேசியுள்ளார். இந்த அனுபவம் மும்பை மக்கள் ஒருவருக்கொருவர் உதவத் தயாராக இருப்பதை தனக்கு உணர்த்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்! ஆதிக்கம் செலுத்தும் பாஜக! 7 மாநகராட்சிகளில் முன்னிலை... காங்கிரசுக்கு 2 இடங்கள்!