தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலான பாஜக நிர்வாகிகள் இன்று சந்தித்து, தமிழக அரசுக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் அடங்கிய மனுவை வழங்கியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளிலேயே சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அந்தக் கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரி கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அரசு அமைக்கப்பட்டது.
அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆன நிலையில், பல்வேறு தரப்பிலிருந்தும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆட்சி அமைவதற்கு முன்பே, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தனது கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை தமிழக வெற்றிக் கழகம் குதிரைப் பேர அரசியல் மூலம் தங்கள் தரப்புக்கு இழுத்துச் சென்றதாக குற்றம்சாட்டியிருந்தார். அதன் பின்னர் பல்வேறு அரசியல் கட்சிகளும் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.
இதையும் படிங்க: "அவல ஆட்சி"..! காவல்துறைக்கே பாதுகாப்பில்ல... தவெகவை பந்தாடிய நயினார்..!
திமுக சார்பில் ஆர்எஸ் பாரதி ஆளுநரை சந்தித்து, தமிழக அரசு குதிரைப் பேர அரசியலில் ஈடுபடுவதாகக் கூறி மனு அளித்திருந்தார். அதேபோல், அதிமுக பொதுச் செயலாளர் அறிவுறுத்தலின்படி முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக வெற்றிக் கழகம் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ள முயற்சிப்பதாக புகார் தெரிவித்திருந்தனர்.
இதனுடன், அரசு பொறுப்பேற்ற பிறகு மாநிலத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது, சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கொலைகள் மற்றும் ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளன என்றும், அவற்றை கட்டுப்படுத்த அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
அரசு பொறுப்பேற்று 50 நாட்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், குறுகிய காலத்திலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தச் சூழலில், தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு, முன்னாள் அமைச்சர் ஒருவரின் முயற்சியால் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களை குதிரைப் பேர அரசியல் மூலம் இழுக்க முயற்சி நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியானதாக கூறப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு "குதிரைப் பேர அரசியல்" என்ற குற்றச்சாட்டு அனைத்து அரசியல் கட்சிகளின் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழக அரசின் மீது தங்கள் கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அடங்கிய மனுவை வழங்கியுள்ளார்.
அந்த மனுவில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருப்பது, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்திருப்பது மற்றும் தமிழக வெற்றிக் கழகம் குதிரைப் பேர அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநரை சந்தித்த பிறகு, மனுவில் இடம்பெற்றுள்ள விவரங்கள் மற்றும் சந்திப்பின் நோக்கம் குறித்து நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் விளக்கமளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக தரப்பில் தமிழக அரசுக்கு எதிராக ஆளுநரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாஜகவும் இதே விவகாரங்களை முன்வைத்து மனு அளித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: திவாலாகிறதா ஆவின்.? என்னென்ன முறைகேடுகள்.? வெள்ளை அறிக்கை வேண்டும்..! நயினார் வலியுறுத்தல்.!