மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழி சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுமார் ஒரு மணி நேரமாக பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு தொடர்பாகவும், ஓபிஎஸ் டிடிவியை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாகவும் பேசியதாக தகவல்கள் எல்லாம் வெளிவந்த சூழ்நிலையில், தற்பொழுது டெல்லிக்கு புறப்பட்டிருக்கிறார்.
சற்று முன் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்ற நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பாஜக மூத்த தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பின் போது, தமிழக அரசியல் நிலவரம், வரவிருக்கும் தேர்தல்கள், அதிமுக உடனான கூட்டணி தொடர்பான நிலைப்பாடு, கூட்டணியின் வலிமை மற்றும் எதிர்கால தேர்தல் வியூகங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
தொகுதி பங்கீடு தொடர்பாகவும், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் கூட்டணிக்குள் இணைப்பது தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமியுடன் என்னென்ன பேசினார் என்பது குறித்து பாஜக தலைவர்கள் அமித் ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோரிடம் தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சந்திப்பின் போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் கூட்டணிக்குள் இணைப்பதால் என்னென்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு அரசியல் தலைவர்களையும் கூட்டணிக்குள் கொண்டு வருவது, தேர்தல் களத்தில் கூட்டணியின் வலிமையை அதிகரிக்கும் வகையில் அமையுமா என்பது குறித்து டெல்லி மட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக அரசால் சொல்லில் அடங்காத துயரம்... விவசாயிகளுக்காக குரல் கொடுத்த நயினார்...!
தமிழகத்தில் பாஜக அமைப்பை வலுப்படுத்துவது, மாவட்ட அளவில் கட்சி கட்டமைப்பை மேம்படுத்துவது, கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் அமித் ஷாவிடம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எடுத்துரைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, பாஜக தனது அரசியல் வியூகங்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, அதிமுக – பாஜக கூட்டணி தொடருமா, அல்லது புதிய அரசியல் மாற்றங்கள் உருவாகுமா என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவி வரும் சூழலில், நயினார் நாகேந்திரன் – அமித்ஷா சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நிர்கதியான நீர் மேலாண்மை... இதுதான் தமிழக நிலைமை... நயினார் நாகேந்திரன் ஆவேசம்...!