தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி காட்டி மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதை தொடர்ந்து பரந்தூரில் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை சந்தித்தது விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக மண்டல வாரியாக பூத் கமிட்டி மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்ற நிலையில் சென்னையில் இருந்து கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. வழியெங்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்று விஜயை பார்த்தனர். பூத் கமிட்டி மாநாட்டுக்கு ஏஜெண்டுகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விஜயை பார்ப்பதற்காகவே கோவையில் திரண்டனர்.
இதையும் படிங்க: அரசியலில் நான் விஜய்-க்கே சீனியர்... அனல் பறக்க பேசிய விஜய பிரபாகரன்!!

ஏற்கனவே மாநாடு, பொதுக்குழு செயற்குழு கூட்டம், 2வது ஆண்டு தொடக்க விழா, பூத் கமிட்டி மாநாடு என்று தவெக அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ஒருபுறம் நடிகர் விஜய் படப்பிடிப்பில் இருந்தாலும், மறுபுறம் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடர்ச்சியாக கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் வாழ்வாதாரத்தில் பின்தங்கிய தவெக நிர்வாகி ஒருவருக்கு புஸ்ஸி ஆனந்த் முன் பணம் கட்டி ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார். அதனை பனையூரில் உள்ள தவெக தலைமை கழகத்தில் வைத்து கொடுக்க புஸ்ஸி ஆனந்த் வந்த போது, ஆட்டோவின் கண்ணாடியில் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் ஸ்டிக்கராக ஒட்டப்பட்டிருந்தது.

இதனை பார்த்த புஸ்ஸி ஆனந்த், தலைவருக்கு நிகராக எனது புகைப்படமா என்று உடனடியாக நிர்வாகிகளிடம் கத்தி ஒன்றை எடுத்து வர கூறினார். இதன்பின் விஜய் உடன் இருந்த தனது புகைப்படத்தை மட்டும் தனியாக ஒரு கோடு போட்டு வெட்டி எடுத்தார். இதன்பின் தவெக நிர்வாகி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு அந்த ஆட்டோ அளிக்கப்பட்டது. ஏற்கனவே தவெக தலைவர் விஜயை, யாரும் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என்று பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது அவரின் இந்த செயலால் விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இஸ்லாமியர்களுக்கு ஆதரவா பேசுனா பத்தாது.. செயலில் காட்டணும்.. வக்பு சட்டம் தொடர்பாக திமுகவை டார்கெட் செய்யும் விஜய்!