அரசியலில் தான் விஜய்-க்கு சீனியர் என்று தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்கள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம். விரைவில் 234 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை நியமினம் செய்ய உள்ளோம். தற்போது செயற்குழு, பொதுக்குழு நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் மாநாடு நடைபெறும் என்று அறிவித்துள்ளோம். எங்களின் வேலைகளை பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம். இப்போதும் கட்சி அலுவலகத்தில் தினசரி ஒவ்வொரு அணியின் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தேமுதிகவின் பலத்தை அடுத்த ஒரு வருடத்தில் கூட்டுவோம். உரிய நேரத்தில் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். தவெக தலைவர் விஜய் அண்ணா ஒன்றும் எதிரி கிடையாது. அவரைப்பற்றி பேசியுள்ளேன்.

முதல் குரு பூஜைக்கு அழைக்கும்போது விஜய் அண்ணாவை பார்த்துள்ளேன். கோட் படத்துக்கு வரும்போது அவரை சந்தித்தேன். கூட்டணி தொடர்பாக எல்லாம் அவரை நான் சந்திக்கவில்லை. எனக்கு வயது 33. அண்ணனுக்கு வயது 50. அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள். அவர் என்னை விட சீனியர். இருப்பினும் அரசியலில் நான் அவரை விட சீனியர் என்று அவரே ஒருமுறை கூறினார். அதை நான் பெருமையாக நினைக்கிறேன். அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். சினிமாவில் அவர் சீனியர். அங்கு அவரின் அனுபவம் பெரியது. இன்றைக்கு கட்சி தொடங்கி அவரின் பின்னால் பல லட்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள். அது அவரின் பலம். 20 வருடங்களுக்கு முன்பு கேப்டன் பின்னால் பல லட்சம் இளைஞர்கள் திரண்டனர்.
இதையும் படிங்க: மதுரை செல்லும் விஜய்... பூத் கமிட்டி மாநாடா? சித்திரை திருவிழாவுக்கா? வெளியானது முக்கிய அப்டேட்!!

அது தேமுதிகவின் பலம். இன்றைக்கு நான், அப்பா என்ன நினைத்தாரோ அதை செயல்படுத்த முயற்சி செய்வேன். கேப்டன் இல்லாதது எங்களுக்கு பெரிய மன வலியை கொடுக்கிறது. அவரின் ஆசியும், கொள்கையை வென்றெடுப்பதும் தான் ஒவ்வொரு தேமுதிக தொண்டனின் கடமை. 2026 தேர்தலில் என் அப்பாவின் ஆசையை வெற்றி பெற்று, கேப்டன் ஆலயத்தில் சமர்ப்பிப்பேன். இந்த திமுக ஆட்சியில் நிறையும் உள்ளது. குறையும் உள்ளது. மக்கள் அடுத்த தேர்தலில் அதை முடிவு செய்வார்கள். லஞ்சம், ஊழலை ஒழிப்போம் என்று கட்சி தொடங்கிய ஆரம்ப காலத்தில் இருந்து கேப்டன் கூறினார். அதேபோல விஜய்யும் அவர் நம்பிக்கையில் எது வேண்டுமானாலும் சொல்லலாம். அதற்கு மக்கள் தான் உரிய பதில் அளிப்பார்கள்.

2011 தேர்தலில் மக்கள் தேமுதிகவுக்கு ஆதரவு கொடுத்ததை போல, 2026 தேர்தலிலும் கொடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன். எல்லா பொய் பிரச்சாரங்களை தாண்டி மக்கள் எங்களை நம்புகிறார்கள். 2026 தேர்தலில் தேமுதிக பொற்கால கட்சியாக மீண்டும் உருவெடுக்கும். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக 10-12 லட்சம் வாக்குகளை பெற்றுக் கொடுத்தது என்று எல்லோருமே கூறியுள்ளனர். அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு நான் எவ்வளவு வாக்கு வாங்கினேன் என்பதும் மக்களுக்கு தெரியும். எல்லா கட்சியும் ஒரு பக்கம் இணையும்போது அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சொந்தக் காசில் சூனியம் வைச்சிக்கிட்ட விசிலடிச்சான் குஞ்சுகள்.. தவெகவுக்கு போலீஸ் வைத்த ஆப்பு...!