கேப்டன் விஜயகாந்த், தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல், தமிழக அரசியல் மற்றும் பொது வாழ்விலும் தனித்துவமான அடையாளத்தைப் பதித்த ஒரு மாபெரும் ஆளுமை. அவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும், அவரது ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களால் மிகுந்த உற்சாகத்துடனும், நெகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகிறது.
விஜயகாந்த், நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி என்ற இயற்பெயருடன், 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் பிறந்தார். அவரது தந்தை கே.என். அழகர்சாமி மற்றும் தாய் ஆண்டாள். மதுரை மண்ணில் பிறந்து, அந்த மண்ணின் பண்புகளையும், மக்களின் அவலங்களை அறிந்து வளர்ந்த விஜயகாந்த், தனது திரை வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், மக்களுக்கு நெருக்கமானவராகவே விளங்கினார்.
விஜயகாந்தின் பிறந்தநாள், அவரது வாழ்நாளில், எளிய மக்களுக்கு உதவி செய்யும் ஒரு விழாவாகவே இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் அவர் தனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி, ஏழை மக்களுக்கு தையல் இயந்திரங்கள், மூன்று சக்கர வண்டிகள், இஸ்திரிப்பெட்டிகள் போன்றவற்றை வழங்கினார். மேலும், தனது கல்லூரியில் ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கி, அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தினார்.
இதையும் படிங்க: இபிஎஸை தற்குறின்னு சொன்ன அந்த வாய் எங்க? - இப்படி அந்தர் பல்டி அடிச்சிட்டீங்களே அண்ணாமலை... புகழேந்தி ஆதங்கம்...!

இன்று கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டினார். தேமுதிக நிறுவனர் தலைவர், பத்மபூஷன், அமரர் கேப்டன் விஜயகாந்த், திரையுலகிலும், அரசியல் தளத்திலும், மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் என்று கூறினார். நடிகர் சங்கத் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் அவரது துணிச்சலான பணிகள் போற்றுதலுக்குரியவை என்று கூறினார்.
கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் என்றும் அவர் தொடங்கிய ஏழை, எளிய மக்களின் பசியாற்றும் அறப்பணி, இன்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொடர்வது பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழும், கேப்டன் விஜயகாந்த் நினைவுகளைப் போற்றி வணங்குவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: “போட்டாரே ஒரு போடு”... அமித் ஷாவையே மிரண்டுபோக வைத்த அண்ணாமலை... திடீர் மனமாற்றத்திற்கு காரணம் இதுவா?