நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பிரச்சாரத்தின்போது, கடந்த 27ம் தேதி அன்று வேலுசாமிபுரத்தில் ஏற்பட்ட நெரிசல், 41 பேரின் உயிரைப் பறித்தது. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்ததால் கூட்ட நிர்வாகத்தில் குழப்பம் ஏற்பட்டு, நெரிசல் ஏற்பட்டதாக எப்ஃஐஆரில் கூறப்பட்டுள்ளது. தவெக-வின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், மாநில பொதுச் செயலாளர் பஸ்ஸி எனந்த் ஆனந்த், இணைச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் FIR-ல் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைக்க, அந்த ஆணையமும் தமது விசாரணையை தொடங்கி உள்ளது. மற்றொருபுறம் காவல்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஆனால், கரூர் நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் திமுகவின் சதி உள்ளதாகவும், செந்தில் பாலாஜிதான் அதற்கு காரணம் என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பரப்பப்பட்டன.
இதையும் படிங்க: புதுச்சேரி: கடைகளை அடித்து நொறுக்கிய தமிழ் அமைப்பினர்.. பாய்ந்த வழக்கு..!!
இதையடுத்து, கரூர் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். ஆனாலும் ஏற்கனவே சோஷியல் மீடியாவில் அவதூறு பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பாஜகவை சேர்ந்த சகாயம், தவெக நிர்வாகிகள் சிவநேசன், சரத்குமார் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து இன்று காலை பிரபல யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் அரசுக்கு எதிராக புரட்சி செய்ய வேண்டும் என்று இளைஞர்களை தூண்டும் வகையில் பதிவிட்டிருந்த ஆதவ் அர்ஜுனா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இலங்கை, நேபாளம் போல புரட்சி ஏற்படும் என ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆதவ் அர்ஜுனா நள்ளிரவில் அந்த பதிவை எழுதிவிட்டு, அதிகாலை நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரூர் சம்பவம் குறித்து வதந்தி… 25 பேர் மீது பாய்ந்த வழக்கு… விரைவில் ARREST!