தமிழகத்திற்கு காவிரி வழியாக திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு திடீரென குறைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் காவிரி நீர் விவகாரம் கவனம் பெற்றுள்ளது. ஒகேனக்கல் வழியாக தமிழ்நாட்டிற்கு வந்துகொண்டிருந்த நீரின் அளவு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியில் இருந்து இன்று காலை 9,958 கனஅடியாக சரிந்துள்ளது. இந்த மாற்றம் விவசாயிகள் மற்றும் காவிரி கரையோர மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செயல்பட்டு வரும் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு தொடர்ந்து நீர் பகிர்வு தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில், தமிழகம் மற்றும் கர்நாடகா மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில், ஜூலை 29 முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க: எங்களுக்கே விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை! அணை நிரம்புறப்போ திறந்து விடுறோம்! கர்நாடகா மீண்டும் மறுப்பு!
ஆனால், கர்நாடகாவில் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகள் அதிகமாக இருப்பதாகக் கூறி அந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த முடியாது என்று கர்நாடக அரசு தெரிவித்தது. மேலும், அந்த உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்திலும் முறையீடு செய்தது.

இதற்கிடையில், காவிரி மேலாண்மை ஆணையம் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவை உறுதிப்படுத்தி, தமிழகத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு நீரை திறக்க வேண்டும் என்று மீண்டும் அறிவுறுத்தியது. இதே நேரத்தில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கர்நாடகாவின் முக்கிய அணைகள் வேகமாக நிரம்பின. குறிப்பாக 84 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 81.95 அடியை எட்டியதால், உபரி நீராக தமிழகத்திற்கு திறக்கப்பட்ட நீர் ஒரு கட்டத்தில் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.
ஆனால் தற்போது மழையின் நிலை மற்றும் அணை நிர்வாகத்தின் செயல்பாடுகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு திறக்கப்படும் நீரின் அளவு மீண்டும் 9,958 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், அணைகள் நிரம்பும்போது உபரி நீரை திறந்துவிடுவது தவிர வேறு வழியில்லை; இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கர்நாடகாவில் இன்று நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது. அதன் முடிவு, தமிழகத்திற்கு அடுத்தகட்டமாக திறக்கப்படும் காவிரி நீரின் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு... இன்று மட்டும் சிறப்பு e-KYC முகாம்; விரல் ரேகை பதிவு கட்டாயம் என முக்கிய அறிவிப்பு!