தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு நாளை (ஆகஸ்ட் 21) மதுரை மாவட்டம், பாரபத்தி கிராமத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு, தமிழகம் முழுவதிலிருந்து 20 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டிற்காக 506 ஏக்கர் பரப்பளவில் மிகுந்த முனைப்புடன் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மாநாட்டு மேடை, இருக்கைகள், மின்விளக்குகள் அமைப்பு உள்ளிட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 50 ஆயிரம் வாகனங்களுக்கான பார்க்கிங், 5 லட்சம் குடிநீர் பாட்டில்கள், கழிப்பறைகள், மருத்துவ வசதிகள் என அனைத்து அடிப்படை வசதிகளும் தயாராகியுள்ளன. குறிப்பாக, அவசர மருத்துவ சேவைக்காக 400 மருத்துவக் குழுவினர் மற்றும் டிரோன் மூலம் மருந்து விநியோக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 2வது மாநாட்டிற்கு ரெடியாகும் தவெக.. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட கட்சி தலைமை..!!
பாதுகாப்பிற்காக 1,000-க்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்று வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு மேடையில் அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் விஜய்யின் புகைப்படங்களுடன் கூடிய கட்-அவுட்கள் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளன. மக்கள் விரும்பும் முதல்வர் என ஸ்டிக்கர்களுடன் குடிநீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
காவல்துறையின் 30-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்து, மாநாட்டிற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. மாநாடு மதியம் 3:15 மணிக்கு தொடங்கி, இரவு 7:00 மணிக்கு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் உத்திகள் குறித்து விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே மாநாட்டிற்கான ஏற்பாட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. 97% பணிகள் முடிவடைந்த நிலையில் மாநாட்டிற்காக ஒன்றரை லட்சம் சேர்கள் வாடகைக்கு 5 ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நான்கு ஒப்பந்ததாரர்கள் சேர்கள் தர மறுத்துள்ளனர்.

மாநாட்டில் சேர்கள் உடைக்கப்படுவதால் அவற்றை வழங்க முடியாது என ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கேரளாவில் இருந்து கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கிருந்து 50 ஆயிரம் நாற்காலிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்மூலம் தவெக மாநாட்டுக்கு கேரளாவும் கைகொடுத்துள்ளது.
இதையும் படிங்க: நேதாஜி பயந்து ஓடுனாரா? கேரளா பாடநூலில் வரலாற்று பிழை!! கொந்தளிக்கும் மக்கள்..!!