முதல்வர் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்த நேரத்திலேயே தேர்தல் “வார்ரூம்” சென்று நிலவரங்களை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, அடுத்த நாளான நேற்று, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் போட்டியிட்ட வேட்பாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் போது, கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து விரிவாக கேட்டறிந்ததாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தவெக எந்தக் கட்சியின் வாக்குகளைப் பிரித்துள்ளது, பெண்கள் வாக்குகளில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன போன்ற விவரங்களையும் முதல்வர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் குறித்து நிலவும் சூழ்நிலையை அறிய அவர் அதிக ஆர்வத்துடன் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், மு.க.அழகிரி வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த முறை யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்” என கருத்து தெரிவித்தார். திமுக வெற்றி குறித்து அவர் நேரடியாக கூறாதது முதல்வருக்கு சிறிய அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் முதல்வர் தொலைபேசியில் பேசி நிலவரம் குறித்து கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோயம்புத்தூர் பகுதியில் குறைந்தது ஐந்து தொகுதிகளில் வெற்றி உறுதி என அவர் நம்பிக்கை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் முதல்வருக்கு மேலும் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ‘குளு குளு’ கொடைக்கானலில் ரெடியாகும் ‘பரபர’ லிஸ்ட்... மருமகன் சபரீசனுக்கு ஸ்டாலின் கொடுத்த முக்கிய அசைன்மெண்ட்...!
மேலும், வாக்குப்பதிவுக்கு அடுத்த நாள் உளவுத்துறையிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படும் அறிக்கையில், சுமார் 160 முதல் 165 தொகுதிகள் வரை திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சுமார் 60 தொகுதிகள் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல், தவெகவிற்கு 10 தொகுதிகளுக்குள் மட்டுமே வெற்றி பெறும் என்றும், அதன் தாக்கம் பெரும்பாலும் அதிமுக வாக்குகளில் இருந்தே ஏற்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் முதல்வரிடம் விளக்கியதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுககு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அது திமுக கூட்டணிக்கு சாதகமாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களின் பின்னர் முதல்வர் நிம்மதியாக கொடைக்கானலுக்கு புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "FULL REST"..! கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின்..! ட்ரோன் பறக்க தடை..!