தமிழ்நாடு அரசின் முக்கிய நடவடிக்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இரண்டு நாள் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு இன்று தொடங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் (சிபி) உள்ளிட்ட முக்கிய காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்க தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இரண்டு நாள் மாநாட்டில் 28 துறைகளின் செயல்திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், "வெற்றி தமிழகம்" தொலைநோக்கு ஆவணத்தின் அடிப்படையில் மாவட்டங்களில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு நடத்த உள்ளார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து துறை அமைச்சர்களும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் காலை ஆலோசனை நடத்துகிறார். பின்னர், பிற்பகலில் மாவட்ட ஆட்சியர்களுடன் தனியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. நாளை, ஜூன் 30ஆம் தேதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தொடர்பான திட்டங்கள் குறித்து ஐஎப்எஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு நடத்துகிறார்.
இதையும் படிங்க: சாராய ஆலை அதிபர் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி?... இதுதான் உங்க மாற்றமா சி.எம்.சார்...!!
இன்று சட்டம்-ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பொது சுகாதாரம், "போதையில்லா தமிழ்நாடு" திட்டம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு நடைபெறுகிறது. நாளை, பசுமை தமிழ்நாடு திட்டம், வனப்பகுதிகளில் சாலை மேம்பாடு, வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது, மனித-விலங்கு மோதல்களைத் தடுப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சியர்களுக்கான தனி அமர்வில் 28 துறைகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சிக்கான கடன் வழங்கல், நகராட்சி நிர்வாகத்தின் கீழ் குடிநீர் திட்டங்கள், கூவம் மற்றும் அடையாறு நதிகள் சீரமைப்பு, திடக்கழிவு மேலாண்மை, தமிழ் வளர்ச்சித் துறையின் நிர்வாகத்தில் தமிழ் பயன்பாடு, சுற்றுலாத் தலங்கள் மேம்பாடு, தமிழர் பண்பாட்டை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாவட்ட வாரியான செயல்திறன் மற்றும் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த இரண்டு நாள் மாநாடு தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தள மாநாட்டு அரங்கில் நடைபெறுகிறது. தொடர்ந்து அமைச்சர்கள் மாநாட்டு அரங்கிற்கு வருகை தந்து வருகின்றனர். இன்னும் சிறிது நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நிகழ்விடத்திற்கு வருகை தர உள்ளார். காலை 10.00 மணிக்கு அவரின் தலைமையில் இந்த இரண்டு நாள் உயர்மட்ட மாநாடு அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.
இதையும் படிங்க: தமிழன் தான் இளிச்சவாயா ? - முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய பெ.மணியரசன்...!