தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடை மற்றும் குறைந்த மின்னழுத்தம் தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் விஜய் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் சமீப நாட்களாக மின் விநியோகம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் வெளியாகி வருகின்றன. சில மாவட்டங்களில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். மின் தேவை அதிகரிப்பு மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாக மின் பற்றாக்குறை ஏற்பட்டதாக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார்.
இந்த சூழலில், முதல்வர் விஜய் மின்வாரிய தலைமையகத்தில் செயல்பட்டு வரும் ‘மின்னகம்’ சேவை மையத்திற்கு சென்று அதன் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டார். பொதுமக்கள் 24 மணி நேரமும் மின்வெட்டு உள்ளிட்ட மின்சார பிரச்னைகள் குறித்து புகார் அளிக்கும் வகையில் மின்னகம் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: 5 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நாசம்! தவெக அரசை விளாசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி!

மின்னகத்திற்கு வரும் புகார்களின் எண்ணிக்கை, அவற்றில் மின்வெட்டு தொடர்பான புகார்கள் எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை முதல்வர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதையும் அவர் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், மின்வெட்டு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தின் தற்போதைய மின் தேவை, மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் மின் உற்பத்தி, வெளியில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் அளவு உள்ளிட்ட முக்கிய விவரங்களையும் அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். சமீபத்தில் மின் தேவை அதிகரித்த நிலையில், காற்றாலை உற்பத்தி குறைந்ததால் கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, இன்று பராமரிப்புப் பணிகள் காரணமாகவும் பல மாவட்டங்களில் திட்டமிட்ட மின் விநியோகத் தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மின்வெட்டு தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ள சூழலில், முதல்வர் விஜய் நேரடியாக மின்வாரிய தலைமையகத்திற்கு சென்று மின்னகம் சேவை மையத்தை ஆய்வு செய்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: புதிய தலைமை செயலகம் கட்ட வாஸ்து! திணறும் அதிகாரிகள்! மாற்று இடம் தேர்வில் தமிழக அரசுக்கு சிக்கல்!