சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றதில் இருந்து, கட்சி நிர்வாகிகள் அரசு அலுவலகங்களுக்குச் சென்று ஆய்வு செய்வதும், வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்வதும் தொடர்ந்து வந்த நிலையில், முதல்வர் விஜய் கட்சியினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையில் மக்கள் நலன் சார்ந்த அரசு செயல்பட்டு வரும் இந்தச் சூழலில், கட்சியினர் தங்கள் எல்லையைத் தாண்டி செயல்படுவது கட்சிக்கும், தலைவருக்கும் களங்கம் ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். த.வெ.க. மாவட்ட செயலர்கள் அனைவரும் இருக்கும் வாட்ஸாப் குழுவில் அமைச்சர் ஆனந்த் மூலம் அனுப்பப்பட்ட அறிக்கையில் இந்த எச்சரிக்கை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் மனசாட்சியுள்ள மக்களாட்சி அமைந்துள்ளதை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். இந்த நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் நாம் அனைவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். கட்சி தொடங்கியதன் நோக்கமே மக்களுக்கு சேவை செய்வதுதான். அதனால் கட்சியினர் தங்கள் எல்லையை அறிந்து செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிராமணராக இருப்பதால் அறநிலையத்துறை அமைச்சர் பதவியா?... பெரியார் பெயரைச் சொல்லி ‘ஸ்ரீரங்கம் ரமேஷ்’ கொடுத்த பதிலடி...!

மேலும், “மக்கள் பிரதிநிதிகள் அல்லாத நம் கட்சி நிர்வாகிகள் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடுவதும், ஆய்வுகள் மேற்கொள்வதும் அறவே கூடாது. இத்தகைய செயல்கள் கட்சிக்கும் முதல்வர் விஜய்க்கும் எவ்வித களங்கமும் ஏற்படாத வகையில் ஒவ்வொருவரும் நடந்துகொள்ள வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டணி அரசு அமைந்த பிறகு பல மாவட்டங்களில் த.வெ.க. நிர்வாகிகள் அரசு அலுவலகங்கள், துறை அதிகாரிகளை சந்தித்து ஆய்வு என்ற பெயரில் விசாரணை செய்து வீடியோக்களைப் பதிவேற்றியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனால் சில இடங்களில் அரசு ஊழியர்கள் மத்தியில் சங்கடமும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் முதல்வர் விஜய்யின் தலையீடு மூலம் கட்சியினருக்கு தெளிவான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை கட்சியின் ஒழுக்கத்தை பலப்படுத்தும் என்றும், மக்கள் மத்தியில் த.வெ.க. அரசின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட கட்சி, அரசு இயந்திரத்துடன் முரண்பாடு இல்லாமல் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்பதே முதல்வர் விஜய்யின் தெளிவான செய்தியாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: ஆட்சிக்கு வந்த 12 நாட்களில் அட்ராசிட்டி... செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ‘மாமூல்’ வேட்டை நடத்திய தவெக நிர்வாகிகள்...!