2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இப்போதே தகித்து வருகிறது. குறிப்பாக திமுகவின் பிரதான கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சியில் பங்கு, அதிக இடங்களில் போட்டி என்ற கொள்கையை முன்வைத்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டது விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், அவர் தான் ஆட்சியில் பங்கும், கூடுதல் தொகுதியும் வேண்டும் என்ற விவாதத்தையே தொடங்கிவைத்தார். இதனால் தவெகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவேன் என அறிவித்த அக்கட்சியின் தலைவர் விஜய் உடன் காங்கிரஸ் ரகசிய டீலிங் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் முன்னிலையிலேயே அக்கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான வேல்முருகன் திமுக கூட்டணியை சரமாரியாக விமர்சித்து பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அந்த கூட்டத்தில் பேசிய வேல்முருகன்: ஆட்சியில் பங்கு கேட்பது காங்கிரஸ் கட்சியின் உரிமை. தி.மு.க.வினர் நம்மை கேலி செய்கின்றனர். ஆட்சியில் பங்கு தராவிட்டால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும். விஜய் தனித்து நின்றாலே 30% வாக்குகளைப் பெறுவார். அவருடன் காங்கிரஸ் சேர்ந்தால் தமிழ்நாட்டை 'தட்டி தூக்கிவிடலாம்'. இது ஒரு நல்ல வாய்ப்பு. விஜய் காங்கிரஸை அழைக்கிறார். திமுக நம்மை கூட்டணியில் இருந்து தள்ள நினைக்கிறது. ஆட்சியில் பங்கு தாருங்கள் என மாணிக்கம் தாகூர் கேட்டால் அவர்களுக்கு பதிலளிக்க முடியவில்லை எனப் பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூரும் காங்கிரஸ் நிர்வாகியின் கருத்திற்கு எந்தவித மறுப்போ, கண்டனமோ தெரிவிக்காதது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திடீர் திருப்பம்... “ரூ. 5000 மகளிர் உதவித் தொகையை வரவேற்கிறோம்...” - தவெக அருண் ராஜ் கொடுத்த அல்டிமேட் விளக்கம்...!
இதையும் படிங்க: நம்பியாருக்கும் - எம்.ஜி.ஆருக்கு தான் பைட்... அப்போ விஜய் யாரு?... சட்டென செல்லூர் ராஜு கொடுத்த ரியாக்ஷன்...!