அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கட்டுப்பாடற்ற விலை உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்து, வரும் நவம்பர் 3-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் "தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுவதுமே ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தைப் புரட்டிப் போடும் வகையில் அரிசி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களின் விலைகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன. சந்தையில் பதுக்கல்காரர்கள் மற்றும் கார்ப்பரேட் வணிக நிறுவனங்களின் ஆதிக்கத்தால் விலைகள் தாறுமாறாக எகிறி வரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய மத்திய அரசும் மாநில அரசும் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றன.

விலைவாசி உயர்வைத் தடுத்து நிறுத்தி, நியாயவிலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பதுக்கல்காரர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பொதுமக்களின் சுமையைக் குறைக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டும் மத்திய பாஜக அரசையும், ஆளும் தமிழக அரசையும் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: ஆளும் அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய திமுக மகளிரணி..!! அக். 31ம் தேதி மாபெரும் போராட்டம் அறிவிப்பு!!
அதன்படி, வரும் நவம்பர் 3-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களும் பொதுமக்களும் திரண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவார்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
இதையும் படிங்க: செஞ்சி சிறுமி மாயம்.! திணறும் போலீஸ்... தொடரும் மர்மம்..! ஆலம்பூண்டியில் அதிமுக சார்பில் போராட்டம்..!