நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையைக் கடுமையாகச் சாடியுள்ளார். அரசுப் பணிகளில் தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களை மட்டுமே நியமிக்கும் வகையில் அரசாணை வெளியிட்டிருப்பது, அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் இலட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை இருளாக்கும் கொடுஞ்செயல் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை, கோவை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் உள்ள அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கடைநிலை ஊழியர்கள் முதல் மேலாளர் நிலை வரையிலான பணிகளுக்குத் தற்காலிகப் பணியாளர்களைத் தேர்வு செய்ய வெளிநாட்டு மனிதவளக் கழகத்தை முகமையாக நியமித்துள்ளதாக சீமான் சுட்டிக்காட்டினார்.
இனி அரசுப் பணியாளர்களைத் தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களாக மட்டுமே நியமிக்கும் வகையில் இந்த அரசாணை வெளியாகியுள்ளது என்று அவர் தெரிவித்தார். இது வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் அவர் வலியுறுத்தினார்.அரசுப் பணி கனவுடன் பல ஆண்டுகளாகப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி, தங்களது இளமையையும் உழைப்பையும் செலவிட்டுக் காத்திருக்கும் தமிழக இளைஞர்களுக்கு, போட்டித் தேர்வு மூலம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அரசு, இருக்கின்ற அரசுப் பணியிடங்களையும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பினார்.

இதுதான் தமிழக வெற்றிக் கழக அரசு ஏற்படுத்திய மாற்றமா, இதற்குப் பெயர்தான் தூயசக்தியா என்று அவர் கேட்டார்.அரசுப் பணிகளையே வெளிமுகமை வழியாக நிரப்ப முற்படுவது, இரவுபகல் பாராமல் படித்து அயராது முயலும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை இருளாக்கும் கொடுஞ்செயல் என்று அவர் குறிப்பிட்டார். தமிழக இளைஞர்கள் பட்டப்படிப்புகளைப் படிப்பதும், தகுதிகளை வளர்த்துக்கொள்வதும், இரவுபகல் பாராது உழைப்பதும் நிரந்தர வேலைவாய்ப்புக்காகத்தானே என்று கேட்ட அவர், அதைக்கூட வழங்க முடியாமல் இருக்கும் வாய்ப்பையும் தடுத்துக் கெடுப்பது என்ன நியாயம் என்று வினவினார்.
இதையும் படிங்க: இது நம்ப லிஸ்ட்லேயே இல்லையே... சீமான், ஸ்டாலின், இபிஎஸுக்கு செம்ம ஷாக் கொடுத்த விஜய்... இடைத்தேர்தலுக்கு மாஸ் பிளான்...!
தவெக அரசு ஆட்சிக்கு வந்தது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கா, அல்லது இருக்கின்ற வேலைவாய்ப்புகளைக்கூட நிரந்தரமற்றதாக மாற்றுவதற்கா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அரசுப்பணிகள் அனைத்தையும் தனியார் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கத் தாரைவார்த்துவிட்டு, போட்டித்தேர்வு வயது வரம்பை உயர்த்துவதால் யாருக்கு என்ன பயன் என்று சீமான் கேட்டார். அரசுப் பணிகளை வெளிமுகமை மூலம் நியமித்தால் அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்ற ஒன்று எதற்கு, கலைத்துவிடலாமே என்றும், எல்லாவற்றையும் தனியாரிடம் ஒப்படைத்தால் அரசு எதற்கு, ஆட்சி நிர்வாகம்தான் எதற்கு என்றும் அவர் கேள்விகளை எழுப்பினார்.
இதையும் படிங்க: "திமுக, அதிமுக ஆதரவை ஏற்பேன்"..! அண்ணனா.. தம்பியா-னு பாப்போம்.! சீமான் உறுதி.!!