சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த்தின் 73-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் உள்ளிட்ட கட்சியினர் விஜயகாந்த் உருவப் படத்துக்கும், அவரது சமாதிக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழகம் முழுவதும் விஜயகாந்த் பிறந்த நாள் விழா வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) “மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0” வரும் 2026 ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 73வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இந்த அறிவிப்பு வெளியானது, இது கட்சி தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விஜய் எங்களுக்கு தம்பி தான்! இதுல என்ன டவுட்டு? பிரேமலதா ஓபன் டாக்..!
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே, பாசார் கிராமத்தில் உள்ள பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் திடலில் மாலை 2:45 மணிக்கு இந்த மாநாடு நடைபெறவுள்ளது. பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி, கலை நிகழ்ச்சிகளுடன் மாநாட்டைத் தொடங்கி வைப்பார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னேற்பாடாக, இந்த மாநாட்டில் தேமுதிகவின் கூட்டணி, வேட்பாளர்கள் மற்றும் தொகுதி எண்ணிக்கை குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாநாட்டுக்கு தனியாக க்யூ ஆர் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த குறியீட்டை செல்போனில் ஸ்கேன் செய்தால், மாநாடு நடைபெறும் தேதி, இடம், நோக்கம் உள்ளிட்ட தகவல் கிடைக்கப் பெறும்.
பிரேமலதா, “இந்த மாநாடு 2026 தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அச்சாரமாக அமையும். தமிழக மக்களின் உரிமைகளை மீட்கும் வகையில், தேமுதிக தொடர்ந்து பணியாற்றும்,” என்றார். தமிழகம் முழுவதும் தேமுதிகவில் இருந்து விலகிய தொண்டர்கள் அனைவரும் தங்களது தாய்க் கழகத்தில் இணையத் தொடங்கி விட்டனர். இது மிகப்பெரிய எழுச்சியாக 2026- இல் அமைய வேண்டும் என்று பிரேமலதா தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

விஜயகாந்தின் புகைப்படங்களை தேமுதிகவைத் தவிர வேறு கட்சிகள் பயன்படுத்தக் கூடாது எனவும், அவரது பிறந்தநாளையொட்டி கேப்டன் அறக்கட்டளை மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனவும் பிரேமலதா தெரிவித்தார். இந்த மாநாடு, தேமுதிகவின் அரசியல் வலிமையை மீண்டும் நிரூபிக்கும் வகையில் பிரமாண்டமாக நடைபெறும் என அவர் உறுதியளித்தார். இந்நிகழ்வில், தேமுதிக தொண்டர்கள், மகளிர் அணி மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இதையும் படிங்க: 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' கேப்டனுடைய கனவு திட்டம்.. பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம்..!!