கடலூர் மாவட்டம் வேப்பூரில் இன்று நடைபெற்ற ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ நிகழ்வில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தமிழக அரசியல் களத்தை அதிர வைக்கும் வகையில் பேசினார். தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பு இந்த மாநாட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு மிகவும் நிதானமாகவும் அதேசமயம் ஆவேசமாகவும் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார் பிரேமலதா.
மாநாட்டு மேடையில் கேப்டன் விஜயகாந்திற்குச் சிம்மாசனமிட்டு, அவரைப் போற்றும் வகையில் உரையைத் தொடங்கிய பிரேமலதா, “விஜயகாந்திற்கு முதல் வெற்றியைத் தந்த மண் இந்த கடலூர் மண். அவர் ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தேமுதிகவைப் பற்றி ஏளனமாகப் பேசுபவர்களுக்குத் தொண்டர்களே பதிலடி கொடுப்பார்கள் என்று எச்சரித்த அவர், “தேமுதிகவை வெற்றி பெற வைத்துவிட்டு, பின்னர் வாய்ப்புத் தர மறுக்கிறார்கள்” என அதிமுகவை மறைமுகமாகத் தாக்கினார். மேலும், தேமுதிக இல்லாமல் தமிழகத்தில் இனி யாராலும் ஆட்சி அமைக்க முடியாது என உறுதிபடத் தெரிவித்தார்.
கூட்டணி குறித்துப் பேசிய அவர், “மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களின் விருப்பத்தின் அடிப்படையில் கூட்டணி குறித்த முடிவை எடுத்துவிட்டோம். ஆனால், இதுவரை எந்தக் கட்சியும் அதிகாரப்பூர்வக் கூட்டணியை அறிவிக்காத நிலையில், நாமும் அவசரப்பட வேண்டிய அவசியமில்லை. நமக்கென்று ஒரு மரியாதையும், கௌரவமும் உள்ளது; அதை மதிக்கின்றவர்களுடன் மட்டுமே கூட்டணி அமையும்” எனத் தெளிவுபடுத்தினார். “தை பிறந்தால் வழி பிறக்கும்; நாம் யாரோடு கூட்டணி வைக்கிறோமோ அவர்களே வெற்றி பெறுவார்கள். இனி நாம் நிதானமாகச் சிந்தித்துச் சாணக்கியனாகச் செயல்படுவோம்” எனப் பிரேமலதா பேசியது, தேர்தல் களம் தேமுதிகவின் பக்கம் திரும்புவதைச் சுட்டிக்காட்டுகிறது. முன்னதாக, கேப்டனுக்கு ‘பாரத ரத்னா’ மற்றும் மணிமண்டபம் உள்ளிட்ட 10 முக்கியத் தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: "யார் கூட கைக்கோர்க்கப் போறாங்க?" இன்னைக்கு தெரியப்போகுது தேமுதிக-வோட 'மெகா கூட்டணி' அறிவிப்பு!
இதையும் படிங்க: DMDK vs NDA: விஜயகாந்த் ஆசைப்பட்டது இதுதான்! – தேமுதிகவிற்கு வலைவீசும் பொன்.ராதாகிருஷ்ணன்!