சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியின் தோல்விக்கு அக்கட்சியின் நிர்வாகிகளே காரணம் என தேமுதிக மாவட்ட செயலர் வெங்கடேசன் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக நிர்வாகி ஒருவரே திமுகவை விமர்சித்துப் பேசியிருப்பது, அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதாவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா மட்டும் வெற்றி பெற்றார். மற்ற 9 தொகுதிகளிலும் தேமுதிக வேட்பாளர்கள் தோல்வியைச் சந்தித்தனர். குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக மாவட்ட செயலர் வெங்கடேசனும் தோல்வியடைந்தார். அந்த மாவட்டத்தில் செஞ்சி, விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் உள்ளிட்ட தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை.
இதற்கிடையே, விழுப்புரம் மாவட்டத்தில் திமுக நிர்வாகிகளின் உள்ளடி வேலைகளே கூட்டணி தோல்விக்குக் காரணம் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தற்போது மீண்டும் விவாதத்துக்கு வந்துள்ளது. முன்னாள் அமைச்சரின் மகன் அமைச்சராக வேண்டும் என்ற நோக்கத்தில், பிற தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறாமல் இருக்கக் கட்சி நிர்வாகிகள் சிலர் செயல்பட்டதாக, தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய திமுக சார்பில் அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பேசும்போதே மின்வெட்டு; எகிறிய பிரேமலதா: செங்குன்றத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் ஆவேச பேட்டி!
இந்தச் சூழலில், தேமுதிக ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய வெங்கடேசன், தேர்தல் தோல்வி குறித்து இதுவரை பேசாமல் இருந்ததாகவும், தற்போது சில உண்மைகளைச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது அவர், விழுப்புரம் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் திமுக கூட்டணி தோல்வியடைந்ததற்கு முதல்வர் விஜய் காரணமல்ல என்றும், திமுக நிர்வாகிகளின் செயல்பாடுகளே முக்கியக் காரணம் என்றும் குற்றஞ்சாட்டினார். திமுக ஆட்சிக்கு வந்தால்தான் தங்களுக்கு மரியாதை கிடைக்கும் என்ற எண்ணத்தில் அக்கட்சியினர் செயல்படவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், தாங்கள் அமைச்சராக வேண்டும் என்ற நோக்கத்தில் சில திமுக நிர்வாகிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களையே தோற்கடிக்கும் வகையில் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டதாக வெங்கடேசன் குற்றம்சாட்டினார். இதன் காரணமாகவே திமுக ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டதாகவும், திமுகவினரின் செயல்பாடுகளால் தேமுதிகவும் தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேரிட்டதாகவும் அவர் பேசினார்.
திமுக கூட்டணியில் தேமுதிக தொடர்ந்து இடம்பெற்றுள்ள நிலையில், கூட்டணிக் கட்சியின் மாவட்ட செயலரே திமுக நிர்வாகிகள் மீது பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து திமுக தரப்பில் ஏற்கெனவே உள்ளடி வேலைகள் தொடர்பான புகார்கள் பேசப்பட்டு வரும் நிலையில், வெங்கடேசனின் பேச்சு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பேச்சு தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், திமுக - தேமுதிக கூட்டணிக்குள் சலசலப்பை உருவாக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெங்கடேசனின் குற்றச்சாட்டுகள் குறித்து திமுக தரப்பில் இதுவரை என்ன விளக்கம் அளிக்கப்படுகிறது என்பது கவனிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின் கண்டனம்!