மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திமுக மாநிலங்களவை எம்பிக்கள் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், மதிமுக எம்.பி. வைகோ, பாமக எம்பி அன்புமணி, அதிமுக எம்பி சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இத்தேர்தலில் திமுகவுக்கு 4 எம்.பி.க்களும், அதிமுகவுக்கு 2 எம்.பி.க்களும் கிடைப்பது உறுதி. திமுகவில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஓரிடம் வழங்கப்பட உள்ளது. எஞ்சிய 3 இடங்களில் திமுகவினர் போட்டியிட உள்ளனர். அதிமுகவில் தேமுதிகவுக்கு ஓரிடம் கொடுப்பதாக 2024 மக்களவைத் தேர்தலின் போது பேசப்பட்டதாக அக்கட்சி ஏற்கெனவே கூறியிருந்தது. ஆனால், அப்படி பேசப்படவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கை விரித்துவிட்டார்.

இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் மா நிலங்களவைத் தேர்தல் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், " தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு என்ன என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். பொறுமை கடலினும் பெரிது. அடுத்த சட்டப்பேரவை தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக ஜன.7-ம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஓரிடம்..? அதிமுக வழங்குமா.? நயினார் சொல்வது என்ன?
மேலும் அவர் கூறுகையில், "ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் சாதக, பாதகங்களை தேர்தல் ஆணையம்தான் விளக்க வேண்டும். இதற்கு ஒற்றை வரியில் என்னால் பதில் அளிக்க முடியாது. முதல்வர் ஸ்டாலின் எதற்காக டெல்லி சென்றார் என்பதை அவர்தான் கூற வேண்டும். இதனால் தமிழக மக்கள் பயன் அடைந்தால் வரவேற்போம்.
அதேபோல், அமலாக்கத் துறையும் சோதனைக்குப் பிறகு விளக்கம் அளிக்க வேண்டும். தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டனை பெற்றே தீர வேண்டும்." என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல்.. எம்.பி.யாகும் கமல்ஹாசன்.. குஷியில் மநீமவினர்.!