திருச்சி பஞ்சப்பூர் மைதானத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் மேடையில் இருந்தனர்.
முன்னதாக அரசு விழாவில் ரூ.5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர், பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “மதுரையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டன. திருச்சியில் இன்று 5,650 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தேன். தமிழகத்தின் எதிர்காலத்துக்கு பெரிய முதலீடு செய்கிறோம்.
2014 முதல் 3 லட்சம் கோடி ரூபாய் நிதி அளித்துள்ளோம். இது காங்கிரஸ் ஆட்சியை விட பல மடங்கு அதிகம். நெடுஞ்சாலைகளுக்கு 57 ஆயிரம் கோடி, ஊரக சாலைகளுக்கு 8 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளோம். காங்கிரஸ்-திமுக ஆட்சியை விட 3-4 மடங்கு அதிகம்” என்றார்.
இதையும் படிங்க: தமிழக வளர்ச்சிக்கு அயராது பாடுபடுகிறோம்! தொடர்ந்து பாடுபடுவோம்! திருச்சியில் பிரதமர் மோடி உருக்கம்!
திமுக ஆட்சியை குறிப்பிட்டு மோடி கடுமையாக தாக்கினார். “2021-ல் தமிழக மக்கள் திமுகவை ஆட்சியில் அமர்த்தினர். ஆனால் திமுக தனக்கு வழங்கப்பட்ட கடமை, பொறுப்பை நிறைவேற்றாமல் துரோகம் இழைத்துள்ளது. அனைத்தும் ஒரே குடும்பத்தில் தொடங்கி முடிகிறது.

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மாறலாம், ஆனால் அதிகாரம் ஒரே குடும்பத்திடம் இருக்கிறது. தமிழகத்தை ஒரே குடும்ப ஏடிஎம்மாக மாற்றியுள்ளனர். விஞ்ஞான ஊழலுக்கு பெயர் பெற்றது திமுக. இம்மாவட்ட அமைச்சர் ஒருவர் வேலை வாங்கிக் கொடுப்பதாக கூறி பணம் பெற்று மோசடியில் சிக்கியுள்ளார். ஊழல் பணம் எல்லாம் ஒரே குடும்பத்துக்கு செல்கிறது” என்று விமர்சித்தார்.
பெண்கள் பாதுகாப்பு குறித்தும் பேசிய மோடி, “திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வழக்கமாகிவிட்டன. சமீபத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த திமுக உறுப்பினரை பார்த்தோம். குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். பெண்கள் பயம் இல்லாமல் வாழ்வதை என்டிஏ உறுதி செய்யும். குற்றவாளிகள்தான் பயத்தில் வாழ வேண்டும், மக்கள் அல்ல” என்று உறுதியளித்தார்.
பிரதமரின் இந்த கடும் தாக்குதல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்டிஏ கூட்டணி வலுப்பெறும் சூழலில் திமுகவுக்கு எதிரான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த பொதுக்கூட்டம் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: வேஷ்டி, சட்டையுடன் திருச்சி விஜயம்!! உற்சாகம்!! ரூ.5650 கோடி நலத்திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி!