திமுகவை விமர்சனம் செய்யும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றிய கேள்விக்கு 'பச்சா பொலிடிக்கல்' என்று அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். இக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து வலியுறுத்திப் பேசினார். ஆனால், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்காகத்தான் முதல்வர் டெல்லி பயணம் மேற்கொண்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய்யும் அதே விமர்சனத்தை முன் வைத்தார்.

விஜய் வெளியிட்ட அறிக்கையில், "சென்ற ஆண்டு நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடந்தபோது அக்கூட்டத்துக்குச் செல்லாமல், தான் செல்லாததற்கான காரணங்களை அடுக்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டார். அப்போது சொன்ன காரணங்கள், இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படியிருக்க, இம்முறை மட்டும் ஏன் செல்ல வேண்டும்? எல்லாவற்றுக்கும் காரணம், அமலாக்கத் துறை படுத்தும் பாடுதான்' என விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் விஜய் தெரிவித்த கருத்து தொடர்பாக தமிழக அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் விமர்சித்துள்ளார். ராணிப்பேட்டையில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக்கடை, சுகாதார நிலையம், கிராம செயலக அலுவலக கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கட்டிடங்களை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகனிடம் விஜய் கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் பதிலளிக்கும்போது, ''பச்சா பாலிடிக்கல்'' என்று பதில் அளித்தார். அதாவது இது ஒரு குழந்தைத்தனமான அரசியல் என்று துரைமுருகன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி.. உதயநிதி முன்னிலையில் உறுதி எடுத்த இளைஞரணி நிர்வாகிகள்.!
இதையும் படிங்க: தீர்ப்பு சாதகம்னா குதூகலிப்பது.. எதிர்ன்னா வக்கிர புத்தியை காட்டுவது.. திமுகவை டேமேஜ் செய்த இந்து முன்னணி!