தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் தி.மு.க.வில் உள் குழப்பம் வெடித்துள்ளது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தேர்தல் வியூகத்தை முழுமையாக வெளிநாட்டு மற்றும் தனியார் வியூக நிறுவனங்களிடம் ஒப்படைத்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் நடத்தும் பாப்புலஸ் எம்பவர்மென்ட் நெட்வொர்க் (PEN), ரிஷி ராஜ்சிங் தலைமையிலான ஐபேக் (I-PAC), ராபின் சர்மா தலைமையிலான சோ டைம் கன்சல்டிங் ஆகிய நிறுவனங்கள் தேர்தல் வேலைகளை கையில் எடுத்துள்ளன. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தனியாக சுனில் கனுகோலு தலைமையிலான டீம் வேலை செய்கிறது.
ஆரம்பத்தில் மீடியா மேலாண்மை மற்றும் சர்வே மட்டுமே செய்த PEN நிறுவனம், தற்போது நேரடியாக நிர்வாகிகளிடம் பேசி வேட்பாளர் தேர்வு வரை தலையிடுகிறது. முதல்வர் ஸ்டாலின் PEN-ஐ முழுமையாக நம்புவதால், அவர்கள் சொல்வதே கட்சியில் சட்டமாகிவிட்டது. PEN ஊழியர்கள் வேட்பாளர் பரிந்துரைக்கு பெயருக்கு பணம் வசூலிப்பதாகவும், சமீபத்தில் ஒரு ஊழியர் வசூல் புகாரில் சிக்கி நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வாயை திறந்தாலே பொய்! ஸ்டாலின் பேச்சு இனி எடுபடாது! இதோட நிறுத்திக்கோங்க! வார்னிங் கொடுக்கும் எடப்பாடி!

ஐபேக் நிறுவனம் ‘ஓரணியில் தமிழ்நாடு’, ‘என் ஓட்டுச்சாவடி; வெற்றி சாவடி’ போன்ற திட்டங்களை கையாண்டு, கட்சியினரிடம் நேரடியாக பேசி வேட்பாளர் பட்டியலை தயார் செய்துள்ளது. PEN-க்கும் ஐபேக்கும் ‘யார் பெரியவர்’ என்ற போட்டி நிலவுவதால், கட்சிக்குள் குழப்பம் அதிகரித்துள்ளது.
இதனால் முதல்வர் ஸ்டாலின் ‘உடன்பிறப்பே வா’ நிகழ்வில் கோவை காரமடை நகரச்செயலராக நீக்கப்பட்ட வெங்கடேஷிடம் அவரை நகரச் செயலர் என்று நினைத்து பேசிய சம்பவம், வாரிசில்லாத ஒரு நிர்வாகியிடம் “உங்கள் மகன் செயல்பாடுகள் சரியில்லை” என கோபம் காட்டிய சம்பவம் போன்ற தவறுகள் நடந்துள்ளன.
‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ போன்ற ஸ்லோகன்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. இதை மறைக்க தொடர் மாநாடுகளை நடத்தி வருகின்றனர். உதயநிதியின் தனி ஆலோசனைக்காக சுனில் கனுகோலு டீம் குறிஞ்சி இல்லத்தில் முகாமிட்டுள்ளது. PEN, ஐபேக் ஆட்களுக்கு அங்கு அனுமதி இல்லை. உதயநிதியை முன்கூட்டியே பிரசாரம் செய்ய PEN திட்டமிட்டாலும், சுனில் டீம் கட்டுப்பாட்டில் இருப்பதால் அது நிறைவேறவில்லை.
இந்த வியூக நிறுவனங்களால் ஏற்பட்ட குழப்பம் வேட்பாளர் தேர்வு மற்றும் பிரசாரத்தில் எதிரொலிக்கிறது. தேர்தல் வரை இந்த குழப்பம் தொடர்ந்தால் கட்சிக்கு பெரும் இழப்பு ஏற்படும் என கட்சியினர் கவலை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: சபாநாயகர் ஓம்பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! ஒருதலைப்பட்சமாக நடக்கிறார்?! எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்!