தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், வாக்காளர் பட்டியல் திருத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது, “பிரதமர் மோடி இன்னொரு நரகாசுரன்… அவரைத் தீர்த்துக்கட்டினால் தான் தமிழகம் நன்றாக இருக்கும்” என்று மிகக் கடுமையான அவதூறு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பா.ஜ.க., அ.தி.மு.க. நிர்வாகிகள் ஜெயபாலனை கைது செய்யக்கோரி போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
தென்காசி பா.ஜ.க. மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி வெளியிட்ட அறிக்கையில், “பிரதமரை இழிவாகப் பேசிய ஜெயபாலனுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தருவோம்” என்று எச்சரித்தார். மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “இதுபோன்ற ஆபாச வார்த்தைகள் பேசிய ஜெயபாலனை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார். சென்னை, தென்காசி, கடையம் உள்ளிட்ட பல போலீஸ் நிலையங்களில் ஜெயபாலன் மீது புகார் அளிக்கப்பட்டது. அவரது சொந்த ஊரான சுரண்டையில் அவரது உருவப் பொம்மை எரிக்கப்பட்டு, செருப்பால் அடிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதற்கிடையில் ஜெயபாலன் மீது தி.மு.க.வுக்குள்ளேயே பெரும் குண்டு வெடித்துள்ளது. கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்தாலும், இரு கரகாட்டம் ஆடும் பெண்களிடம் வாட்ஸ்அப் மூலம் ஆபாசமாகப் பேசியதாகவும், பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் தகாத முறையில் பேசி, புகைப்படம்-வீடியோ கேட்டு பேரம் பேசிய ஆடியோவும் வெளியாகியுள்ளது. இந்த ஆடியோக்களை உளவுத்துறை போலீசார் தி.மு.க. தலைமைக்கு அனுப்பியதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி நரகாசுரனா? வன்மம், வன்முறையை வெளிப்படுத்தும் திமுக.. நயினார் ஆவேசம்!

மேலும், தென்காசி தி.மு.க. அலுவலகத்தில் இரவு 7 மணிக்கு மேல் “விரும்பத்தகாத சம்பவங்கள்” நடப்பதாகவும் பல புகார்கள் கட்சித் தலைமைக்கு சென்றுள்ளதாக தி.மு.க. நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர். இதனால் ஜெயபாலன் மீது கட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பா.ஜ.க. மாநிலக் குழு உறுப்பினர் பாரதி கண்ணன், “முதல்வர் ஸ்டாலின் இதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். இதே கருத்தை அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரப்பி வருகின்றனர்.
தி.மு.க. தலைமை இதுவரை இந்தப் பிரச்சினை குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. ஆனால் ஜெயபாலன் மீதான புகார்கள் ஒரே நேரத்தில் பிரதமர் அவதூறு, பெண்களுக்கு தொல்லை, கட்சி அலுவலகத்தில் தகாத நடத்தை என மூன்று திசைகளிலும் வெடித்துள்ளதால், அவர் பதவியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அடிச்சு நகர்த்த போகுது... 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... உஷார் மக்களே...!