தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் குறித்து விமர்சித்து பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்டிருந்தார். அந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில், திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், முதல்வர் விஜயை விமர்சித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இன்று அதிகாலை, விளாத்திகுளத்தில் உள்ள மார்க்கண்டேயனின் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர், அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார், அவரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நாகாலாந்தில் பயங்கரம்: மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட கொடூர நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாப பலி!
தொடர்ந்து முதல்வரை விமர்சித்து பேசியதாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சமூக வலைதளங்களில் அரசை விமர்சிக்கும் பதிவுகள் தொடர்பாகவும் காவல்துறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பது விளாத்திகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை முதலே அவரது வீட்டை போலீசார் முற்றுகையிட்டிருந்தனர். பின்னர், கைது நடவடிக்கைக்காக போலீசாருடன் மார்க்கண்டேயன் சில நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டு அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
காலை 6 மணிக்கு முன்பாகவே போலீசார் அவரது வீட்டிற்கு சென்றதாகக் கூறப்படுகிறது. வீட்டை முற்றுகையிட்ட போலீசார், கைது செய்யப்படுவதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, அங்கிருந்தே மார்க்கண்டேயன் போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர், அவரை காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இருப்பினும், இதுவரை அவர் எந்த காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
ஏற்கனவே திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டபோது, அவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு நாள் முழுவதும் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், மார்க்கண்டேயனும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு செல்வதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகும் என்பதால், காலை 8 முதல் 8.30 மணி அளவில் அவர் அங்கு அழைத்துச் செல்லப்பட வாய்ப்புள்ளது.
ஒருவேளை கோவில்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தால், அவர் விரைவில் அங்கு சென்றடைவார் என்றும் கூறப்படுகிறது. இதுவரை அவர் எந்த காவல் நிலையத்தில் உள்ளார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. தற்போது காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டிருப்பது மட்டுமே உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: OpenAI-யில் இந்தியருக்கு உயரிய பொறுப்பு... CTO ஆக நியமிக்கப்பட்ட உதய் ருத்தராஜூ!