திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயனின் ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை திமுக தரப்பு எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது. ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், அரசு தரப்பில் அதனை மறுப்பதற்கான வலுவான காரணங்கள் இல்லை என்றும் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மார்கண்டேயன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், முறையான நோட்டீஸ் வழங்காமல் நேரடியாக கைது செய்யப்பட்டிருப்பது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என்று வாதிட்டார்.
மேலும், மனுதாரர் எந்தவித குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என்றும், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படவில்லை என்றும் தெரிவித்த அவர், நீதித்துறை நடுவர் இயந்திரத்தனமாக ரிமாண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து, நீதிமன்றக் காவல் உத்தரவை ரத்து செய்து ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குறுக்கு வழி ஆட்சி... பனையூர் பங்களாவில் பதுங்கல்..! உதயநிதி துணிச்சல பார்த்து இருக்கீங்களா CM சார்..? விளாசிய அப்பாவு..!
இதற்கிடையில், நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மார்கண்டேயனை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் உடன் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவலின்படி, மார்கண்டேயனின் உடல்நலம் மற்றும் சிறை வசதிகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்ததாகவும், அதற்கு பதிலளித்த மார்கண்டேயன், தனக்கு எந்த அசௌகரியமும் இல்லை என்றும், தாம் செய்ததாக கூறப்படும் குற்றத்திற்காக ரிமாண்ட் செய்யப்பட்டிருப்பதே வருத்தமளிப்பதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், "சட்டப்பேரவை முதல்வரின் சொந்தச் சொத்து அல்ல. கவலைப்பட வேண்டாம், ஜாமீனில் வெளியே வருவீர்கள்" என்றும், "தலைவர் கலைஞரும் இதே சிறையில் இருந்துள்ளார்; நீங்கள் இங்கு இருப்பதும் ஒரு பெருமைதான்" என்றும் உதயநிதி கூறியதாக திமுக இளைஞரணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிறையில் இருந்து திரும்பிய பின்னர், "அவதூறு பேச்சுக்காக சிறை என்றால், த.வெ.க. நிர்வாகிகளும் பலர் சிறைக்கு சென்றிருக்க வேண்டும்; நாம் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டோம்" என்று உதயநிதி தன்னுடன் இருந்தவர்களிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மார்கண்டேயன் இடையேயான உரையாடல் தொடர்பான இந்த தகவல்கள் திமுக வட்டாரங்களில் வெளியானவை. இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: நெருங்கும் பட்ஜெட்..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!! உதயநிதி தலைமையில் முதல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!