தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி இருண்ட காலமாகத்தான் இருந்தது என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
தேனியில் திமுக சார்பில் பாசறைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கம்பம் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாட்டை பொறுத்தவரை தேர்தலில் வெற்றி தோல்விகளை பெண்கள்தான் நிர்ணயம் செய்கிறார்கள். அத்தகைய பெண்களின் நலனுக்காக நீதிக் கட்சியில் தொடங்கி அண்ணா, கருணாநிதி எனத் திராவிட இயக்கம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

அதன் நீட்சியாக தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணத் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கான எந்தவித திட்டங்களும் செயல்படுத்தவில்லை. உத்திரப்பிரதேசத்தில் அம்மாநில பாஜக அரசுக்கு எதிராகப் பேசும் பெண்கள், சிறுபான்மையினரின் வீடுகள் புல்டோசர் மூலமாக இடிக்கப்படுகின்றன. இதனால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பிரதமர் மோடி நடந்து முடிந்த திட்டங்கள், கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எல்லாம், தனது ஆட்சியில் செயல்படுத்தி சாதனை புரிந்ததாகக் கூறி வருகிறார்.

அதே போன்றுதான் தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக, டெல்லியிலிருந்து என்ன சொன்னார்களோ அதற்கேற்ப குனிந்து கும்புடு போட்டு ஆட்சி செய்தார். அதனால், தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி இருண்ட காலமாகத்தான் இருந்தது. ஆனால், தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு மாநில உரிமைகள், மக்கள் நலனுக்காக ஒன்றிய அரசுடன் சமரசமின்றி செயல்படுகிறது. பெண்கள் வெளியே செல்லும்போது ஹேன்ட் பேக் எடுத்துச் செல்வது போல திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக இந்த ஆட்சிக்கு எதிராக பரப்பப்படும் தவறான கருத்துகளை ஆராய்ந்து அதன் உண்மைத் தன்மையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்"என்று கனிமொழி கூறினார்.
இதையும் படிங்க: சாட்டையை சுழற்றிய ஸ்டாலின் - ஷாக்கான துரைமுருகன் - இலாகா மாற்றத்தின் பின்னணி என்ன?
இதையும் படிங்க: எங்களை குறைகூற அருகதை இல்லை... எடப்பாடியை விளாசி தள்ளிய ஆர்.எஸ்.பாரதி!!