முன்னதாக அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கொலைகள் மற்றும் வன்முறைகள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, வழிப்பறி இவற்றைப் பற்றி சட்டமன்றத்திலும், அறிக்கைகள் வாயிலாகவும் பலமுறை எடுத்துக் கூறியும், இந்த அரசிடம் கடுமையான, உறுதியான நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்று விமர்சித்திருந்தார். இந்த நிலையில் திமுக அரசு குறித்து விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1.15 கோடி மகளிருக்குக் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை. ரூ.10,160.63 கோடியில் 662 கோடி முறை பயணம் பெண்கள் விடியல் பயணம். மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் மூலம் ரூ.721 கோடி வழங்கப்பட்டு 4,83,000 கல்லூரி மாணவிகள் பயன் பெற்றுள்ளனர். இவ்வாறு மக்கள் நலத் திட்டங்கள் மூலம் திராவிட மாடல் அரசு பெண்களிடம் பெற்றிருக்கும் அபரிமிதமான செல்வாக்கை கண்டு என்ன செய்வதென்று தெரியாமல், விழி பிதுங்கி, தனது டெல்லி எஜமானர்களின் வழியில் பொய்களையும் அவதூறுகளையும் அள்ளிக் கொண்டுவந்து அரசியல் செய்யப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி.

நாடு போற்றும் நான்காண்டு திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டு மக்களிடம் பெற்றிருக்கும் அபரிமிதமான செல்வாக்கைக் கண்டு விரக்தியின் உச்சத்திற்கே சென்றிருக்கிறார் பழனிசாமி. திமுக மக்களிடம் அடைந்துள்ள செல்வாக்கால், 2026 தேர்தலில் மட்டுமல்ல. இனி எந்தத் தேர்தலிலும் அதிமுகவிற்கு தோல்விதான் என்னும் வயிற்றெரிச்சலில், வடிகட்டிய பொய்களைத் திரட்டி புலம்பியிருக்கிறார் புலம்பல் சாமி.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நிர்வாகத்திறனால் இன்றைக்கு இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் இழுத்தடித்த இழிவான ஆட்சியல்ல இது. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர் "எவராக இருந்தாலும்" சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கும் ஆட்சி இது. கடந்த 4 ஆண்டு காலத் திமுக ஆட்சியில் தொடர்ந்து தமிழ்நாட்டில் குற்ற நடவடிக்கைகள் குறைந்து வருகின்றன.
இதையும் படிங்க: #நாசமாய்போன_நான்காண்டு... ஸ்டாலின் ‘ஷாக்’, எடப்பாடி ‘ராக்’- தெறிக்கவிட்ட அதிமுக!

கடந்த 12 ஆண்டுகளில் 2024 ஆம் ஆண்டில்தான் கொலை சம்பவங்கள் குறைவாக நடந்திருக்கின்றன. கொலை குற்ற விகிதம் ஒரு இலட்சம் மக்களுக்கு தேசிய சராசரி 2.2 என்றால், தமிழ்நாட்டில் அது 1.1 ஆகக் குறைந்திருக்கிறது. ஆவடி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் பெண் ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் அற்ப நோக்கில், அந்தக் காவலரை நேற்றைய தினமே உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுத்ததை மறைத்து விட்டு, பேட்டி என்ற பெயரில் அரசியல் நாடகமாடிச் சென்றுள்ளார் அற்ப பேர்வழி பழனிச்சாமி.
இப்படி கதை கதையாக அடித்து விட்டு அதை தமிழ்நாட்டு மக்கள் நம்புவார்கள் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம் இல்லையா? எங்கள் காதுகளும் பாவம் இல்லையா? தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் இழுத்தடித்த இழிவான ஆட்சியல்ல இது. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர் "எவராக இருந்தாலும்" சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சி இது.

பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்றால் என்ன? என்று கேட்கிற அளவிற்குச் சட்டம் ஒழுங்கு மரணப் படுக்கையில் இருந்தது. தமிழ்நாட்டின் மனசாட்சியை உறைய வைத்துப் பொள்ளாச்சி கொடூரம்! பேராசிரியரே மாணவிகளைப் பாலியல் தொழிலுக்குள் தள்ளப் பார்த்த நிர்மலாதேவி விவகாரம்! சென்னை வில்லிவாக்கத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர்! இவ்வாறு பட்டியலிட ஆரம்பித்தால் பக்கங்கள் பத்தாது, தமிழ்நாட்டுப் பெண்களைப் பாதுகாப்பில்லாமல் அச்சுறுத்தல் மிக்கச் சூழலில் வைத்திருந்ததுதான் அதிமுகவின் அவல ஆட்சி.
அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை விட மிகத் தீவிரமான நடவடிக்கைகள் திமுக ஆட்சியில்தான் உறுதியாகவும் விரைவாகவும் எடுக்கப்படுகின்றன. நான்காண்டு காலத் திராவிட மாடல் ஆட்சி மக்களிடம் பெற்றிருக்கும் அபரிமிதமான செல்வாக்கை கண்டு பொறுக்காமல் பிதற்றும் பழனிசாமியின் கபட நாடகங்கள் மக்களிடம் ஒருநாளும் வெற்றி பெறாது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் 'வீரவேல் வெற்றிவேல்' ஆபரேஷன்.. 2026 தேர்தலுக்காக நயினாரின் அதிரடி அறிவிப்பு!