பீகார் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி 'இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகள் பீகார் மக்களை இழிவுபடுத்துவதாகவும், ஆனால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) அத்தகைய தலைவர்களை பீகாருக்குப் பிரச்சாரத்திற்காக அழைப்பதாகவும் சாடினார். கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் பீகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்களை இழிவுபடுத்திப் பேசியுள்ளனர் என்றும், காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும் தமிழ்நாட்டில், வேலைக்காகச் சென்றுள்ள பீகாரைச் சேர்ந்த கடின உழைப்பாளிகள் துன்புறுத்தப்படுவதாகவும், தவறாக நடத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனைக் கண்டித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாட்டிலுள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடிஅடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றும், ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் கூறியிருந்தார்.
ஆனால் பிரதமர் மோடி திமுகவினரால் பீகார் மாநிலத்தவர்கள் தமிழகத்தில் அவமதிக்கப்படுகிறார்கள் எனக்கூறியதை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரித்து தமிழர்களால் பீகாரிகள் அவமதிப்பு என மாற்றியதாக பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடியைக் கண்டித்தும், தமிழர்கள் என்றாலே இலக்காரமா? என திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்த நாள்..!! பிரதமர் மோடி மரியாதை..!!
திமுக மாணவர் அணி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், “மோடியே மன்னிப்பு கேள்!!! தமிழர் என்றால் இலக்காரமா?. பிரதமர் என்ற பொறுப்பை மறந்து. தமிழர்கள் மீது வெறுப்பை உழிந்த மோடியை வன்மையாக கண்டிக்கிறோம்!!” என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
அதேபோல், நெல்லை ஜங்ஷன் டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக பொறியாளர் அணி மாநில துணைச் செயலாளர் ராஜ வர்மன் என்பவரது சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், தமிழ் என்றால் கசக்குதா தமிழன் என்றால் எரியுதா. மானமுள்ள தமிழர்களே சிந்திப்பீர் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “இப்படி பேசி மாண்பை இழந்துடாதீங்க” - தமிழனாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்...!