திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ திமுக மகளிர் அணி மேற்கு மண்டல மாநாட்டிற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி, மாநாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று தனியார் அரங்கில் கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், முத்துச்சாமி, கயல்விழி செல்வராஜ் மற்றும் மேற்கு மண்டலப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய கனிமொழி, "தமிழகப் பெண்கள் சாதனை படைப்பவர்கள்; அவர்களைப் பற்றி சமூக வலைதளங்களில் வரும் தவறான கருத்துகளைக் கண்டு கலங்கத் தேவையில்லை. பரீட்சை எழுதவிடாமல் கூட்டத்திற்கு வரச் சொல்லும் இயக்கம் திமுக அல்ல" என்று தெரிவித்துள்ளார்.
மகளிர் முன்னேற்றம் குறித்துத் தொடர்ந்து பேசிய அவர், "பணிக்குச் செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குக் காலை உணவு சமைக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வைப் போக்கியது திமுக அரசின் காலை உணவுத் திட்டம். அடுத்த தலைமுறைப் பெண்களின் எதிர்காலம் சிறக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்கள் தன்னம்பிக்கையோடு வாழ்வதற்கான சூழலை இந்த ஆட்சி உறுதி செய்துள்ளது" என்றார். ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் மாநாட்டுப் பந்தல் பணிகளை ஆய்வு செய்த அவர், சுமார் 1 முதல் 2 லட்சம் பெண்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாகக் கூறினார். பெண்களுக்குப் பாதுகாப்பு குறித்துப் பேசிய அவர், "தமிழகம் முழுவதுமே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாகத்தான் உள்ளது; எனினும் காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்றி மாநாடு சிறப்பாக நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த கனிமொழி எம்.பி, "எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை எவ்வித வளர்ச்சியும் இல்லாத கடன் மாநிலமாகத்தான் விட்டுச் சென்றார். இன்று அது வளர்ச்சி மாநிலமாக மாறியுள்ளது அவருக்குத் தெரியும்; தேர்தலுக்காகப் பொய் பேசுகிறார்" என்றார். மேலும், தமிழிசை சௌந்தரராஜனின் விமர்சனத்திற்குப் பதிலடியாக, "முதலில் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் போடச் சொல்லுங்கள்" எனத் தனது பாணியில் பதிலடி கொடுத்தார். தேர்தல் அறிக்கையில் கவர்ச்சித் திட்டங்களை விட முன்னேற்றத்திற்கான திட்டங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறிய அவர், கருப்புக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம் எனத் தனது பேட்டியை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: "திமுக ஏவிவிடும் பூனையாக மாறிவிட்டார் திருமாவளவன்!" - விசிக-வை அடகு வைத்துவிட்டதாக விமர்சித்த நிர்மல்குமார்!
இதையும் படிங்க: "திமுகவை வீழ்த்த விஜய் ஒருவரால் முடியுமா?" – வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி!