தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கூட்டணி அரசியல் சூடுபிடித்துள்ளது. தேமுதிகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெளிவான பதில் அளித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் கூறியதாவது: “தேமுதிக உடன் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. அப்படி நடந்தால் உங்களுக்கு நானே தெரிவிப்பேன். அனைத்து தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியது பற்றி என்னால் கருத்து சொல்ல முடியாது. அது அவருடைய கருத்து.”
மேலும் அவர் கூறியதாவது: “குடியரசு தினத்தன்று தேநீர் விருந்தில் என்னுடைய நீண்டகால நண்பரான சுதீஷை சந்தித்து பேசினேன். ஆனால் கூட்டணி பற்றி எந்த பேச்சும் இல்லை. தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி இப்போது கருத்து சொல்ல முடியாது. மார்ச் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். அப்போது பார்க்கலாம்.”
இதையும் படிங்க: ஓட்டுக்காக தேசத்தை கூறுபோட முயலுகிறது திமுக! ராஜகண்ணப்பன் சர்ச்சை பேச்சு! வெளுத்து வாங்கும் நைனார்!
பிரதமர் மோடி நிகழ்ச்சியில் மேடையில் தேமுதிகவை பார்க்கலாமா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் “பார்க்கலாம்” என்று சுருக்கமாக பதிலளித்தார்.

இதற்கிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேமுதிக – அதிமுக கூட்டணி பேச்சு உடன்பாடு இல்லாமல் முடிந்தது. தற்போது தில்லி பாஜக தலைமை தேமுதிகவுடன் பேச்சு நடத்தி வருகிறது. தேமுதிக மத்தியில் ஆட்சி பங்கு கேட்பதால் இந்த பேச்சு நடக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக – பாஜக கூட்டணி உறுதியானால் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் இணையுமா? அல்லது புதிய சமன்பாடுகள் உருவாகுமா? என்பது கேள்வியாக உள்ளது. பிரேமலதா விஜயகாந்த் அண்மையில் பல்வேறு தரப்புகளுடன் பேச்சு நடத்தி வருவதாக கூறியிருந்த நிலையில், நயினார் நாகேந்திரனின் தெளிவான மறுப்பு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 1ஆம் தேதி பிரதமர் மோடி வருகை தமிழக கூட்டணி அரசியலுக்கு திசை தீர்மானிக்கும் நிகழ்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிகவுடன் பாஜக உறவு எப்படி அமையும் என்பது இனி தெரியவரும்.
இதையும் படிங்க: பிரதமருக்கு எதிரான சதித்திட்டம்!! பார்லி.,-யில் பழி தீர்க்க முயற்சி!!! மோடிக்கு வைக்கப்பட்ட குறி!! காங்கிரசை சாடும் நயினார்!