கோயம்புத்தூர்: திமுகவின் மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு கடந்த டிசம்பர் 29ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பில் நடைபெற்றது. பெண்களின் அரசியல் பங்கேற்பையும் சமூக முன்னேற்றத்தில் அவர்களின் பங்களிப்பையும் வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டுக்கு கட்சியின் துணைப் பொதுச்செயலரும் பாராளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமை தாங்கினார். முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
13 மாவட்டங்களையும் 39 சட்டப்பேரவை தொகுதிகளையும் உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் இருந்து 1.15 லட்சம் மகளிர் பங்கேற்றதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய உளவுத்துறை போலீசார் தரப்பில் 60,000க்கும் மேற்பட்ட பெண்கள் மட்டுமே பங்கேற்றதாக கூறப்பட்டது. இந்த மாநாடு கனிமொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், மாநாட்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட சுவர் விளம்பரங்கள், பேனர்கள் மற்றும் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் வெளியான விளம்பரங்களில் கனிமொழியின் படம் இடம்பெறவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில விளம்பரங்களில் கனிமொழியின் பெயர் இருந்தாலும் படம் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் அறிவிப்பு 3 முறை ஒத்திவைப்பு!! 'பேரம் பஞ்சாயத்து' எதிரொலியா?! உற்சாகம் இழந்த தொண்டர்கள்!
அமைச்சர் சாமிநாதன் கொடுத்த விளம்பரத்தில் கனிமொழியின் பெயரும் படமும் இடம்பெறவில்லை. கட்சியின் சில நிர்வாகிகள் கொடுத்த விளம்பரங்களிலும் கனிமொழி புறக்கணிக்கப்பட்டிருந்தார். அமைச்சர் கயல்விழி கொடுத்த விளம்பரத்தில் மட்டுமே கனிமொழியின் பெயரும் படமும் இடம்பெற்றிருந்தது.

இந்த நிகழ்வு கனிமொழியின் ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதியின் மகளும் முதல்வர் ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழி கட்சியின் துணைப் பொதுச்செயலராகவும் பாராளுமன்றக் குழுத் தலைவராகவும் உள்ளார். அவரே மாநாட்டுக்கு தலைமை தாங்கியிருந்த நிலையில், விளம்பரங்களில் அவரது படமும் பெயரும் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருப்பது ஏற்புடையது அல்ல என்று ஆதரவாளர்கள் கோபம் தெரிவித்துள்ளனர்.
கனிமொழி ஆதரவாளர்கள் கூறுகையில், “மாநாட்டுக்கு தலைமை வகிப்பவரின் படமும் பெயரும் மரபுப்படி எல்லா விளம்பரங்களிலும் முதன்மையாக இடம்பெற வேண்டும். ஆனால், இங்கு கனிமொழியின் படம் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது அவரது செல்வாக்கையும் வளர்ச்சியையும் திட்டமிட்டு தடுக்கும் முயற்சியாக தெரிகிறது. அமைச்சர்களின் விளம்பரங்களில் உதயநிதியை விளம்பரப்படுத்திய அளவுக்கு கனிமொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை” என்று வேதனை தெரிவித்தனர்.
இந்த சம்பவம் திமுகவில் உள்கட்சி மோதல் மீண்டும் வெளிப்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கனிமொழியின் ஆதரவாளர்கள் இதை கட்சி தலைமைக்கு எடுத்துச் செல்ல உள்ளதாகவும் தெரிகிறது. மகளிர் அணி மாநாடு போன்ற முக்கிய நிகழ்ச்சியில் இத்தகைய புறக்கணிப்பு நடந்திருப்பது கட்சியின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகள்!! மாநாட்டில் உடைத்து பேசிய மா.கம்யூ.!! கூட்டணி கட்சியே இப்படியா?